மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த இடம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வவுணதீவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பாவற்கொடிச்சேனை, வாகக்கல்மடு காட்டுப்பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 400 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் அங்கிருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவரை கைதுசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோன்று நேற்று முன்தினம் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின்போது 154 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் 14000ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மதுபாவனையினை குறைக்கும் செயற்றிட்டத்திற்கு அமைவாக வவுணதீவு பொலிஸார் தொடர்ச்சியான தேடுதல் பணிகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.