மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலாளர்களுக்கு உடனடி இடமாற்றங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  பிரதேச செயலகங்களில் ஐந்து வருடங்கள்  கடமையாற்றிய பிரதேச செயலாளர்களுக்கு உடன் அமுலுக்கு வரும்வகையில்  இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே பிரதேச செயலகத்தில் ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்த பிரதேச செயலாளர்கள் அனைவரையும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய உள்நாட்டலுவல்கள் அமைச்சு உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் குறித்த இடமாற்றங்களை நடைமுறைப் படுத்தியுள்ளது.
 

இவ் இடமாற்றத்தின் பிரகாரம்
வாகரையில் கடமையாற்றிய எஸ்.ஆர்.ராகுலநாயகி வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கும், வெல்லாவெளியில் கடமையாற்றிய எஸ். வில்வரெட்ணம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கும், செங்கலடியில் கடமையாற்றிய உ.உதயசிறிதர் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கும் , வவுணதீவில் கடமையாற்றிய எஸ். ராஜ்பாவு கிரான் பிரதேச செயலகத்திற்கும் ,கிரான் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய எஸ்.தனபாலசுந்தரம் வாகரை பிரதேச செயலகத்திற்கும்,  காத்தான்குடியில் கடமையாற்றிய எஸ்.எச்.முசமில்  கோறளைப்பற்று மத்திக்கும் , கோறளைப்பற்று மத்தியில் இருந்த ற.நிகாரா ஓட்டமாவடிக்கும் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.

இதேநேரம்  ஏற்கனவே விசாரணை என  கூறி கொழும்பிற்கு அழைக்கப்பட்ட வாகரை மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர்கள் எந்தவித குற்றமற்றவர்கள் எனவு அவர்கள் அமைச்சின் தேவை  கருதியே கொழும்பிற்கு அழைக்கப்பட்டதாக கூறி அவர்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறித்த இடமாற்றத்தில் இணைத்து  மீண்டும் மட்டக்களப்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.



இதேவேளை இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நியமனத்திற்கான நேர்முகத்தேர்வு கொழும்பில் நடைபெறும் அதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபரை நியமிப்பதில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தொடர்ந்தும்  இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் இது குறித்து பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.