பழுகாமம் வீதியின் அவல நிலை.


(திலக்ஸ் ரெட்ணம்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசம் போரினால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டமையினால் நாட்டில் நடைபெற்ற அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்ட வந்த வரலாறே தொடர்கதையாக இருந்துள்ளது. 2009 போர் நிறைவுற்றதும் இன,மத, பிரதேச பேதங்களால் அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை நிதர்சனமான உண்மையாகும். 
நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் முன்னேற்றத்திற்கு பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் முக்கியமான பௌதீகக் காரணிகளாகும். அந்த வகையில் சுமார் 50வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பழுகாமம் பிரதான வீதி இன்றுவரையும் எதுவிதமான அபிவிருத்தியும் இன்றி இப் பாதையினை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த வருடம் கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி அமைச்சினால் இப்பாதையின் ஒரு பகுதியான போரதீவு பிரதான பாதை 1.55கிலோ மீற்றர் பாதை 1.60 கோடி செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது. தற்போது பழுகாமம் வீதி மழைகாலம் என்பதால் பள்ளங்களில் அதிகளவு நீர் தேங்குவதால் பாதையினால் செல்லும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். 
இப்பாதையினால் பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும் போது தங்களது காற்பாதணிகளை கைகளில் கொண்டு செல்கின்றனர். அதுமாத்திரமின்றி அலுவலகங்களிற்கு செல்லும் உத்தியோகஸ்தர்களும் இதில் சிலவேளைகளில் சறுக்கி விழுந்து செல்கின்றனர். இப்பாதையில் பலர் விபத்துக்குள்ளான சம்பவங்களும் பதிவாகியுள்ளது. எத்தனை வருடங்கள் கடந்துவிட்ட போதும் கண்மூடிக்கொண்டு அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் இருந்தள்ளமை பெரிதும் கவலைக்குரிய விடயமாகின்றது. 
படுவான்கரை பிரதேசங்களில் பல இடங்களில் வீதி தேவைகள் இருக்கின்ற போது மட்டக்களப்பு நகரில் சீரான முறையில் இருந்த கொங்றீட் பாதைகளுக்கு மேலாக காப்பெற் வீதி போடப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இவை அரசாங்கத்தின் தவறுகளா? இல்லை மட்டக்களப்பு மாவட்டத்தின் திட்டமிடலில் உள்ள தவறா?  மக்கள் பிரதிநிதிகளின் தவறா?? என்று புரியவில்லை. 
இது தொடர்பாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியிலாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது 'அடுத்த வருடம் இவ் வீதி புனரமைக்கப்படும் எனவும், இவ்வீதி ஐ திட்டத்தினுள் உள்வாங்க பட்டுள்ளது' என தெரிவித்தார்.