இந்திய இராணுவத்தினால் படுகொலைசெய்யப்பட்டவர்கள் 30வருடத்திற்கு பின்னர் நினைவுகூரப்பட்டனர்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் 1987ம் ஆண்டு இந்திய இராணுவம்  மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 14 உறவுகளின் நினைவுதினம் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடியில் 1987ம் ஆண்டு வீதி ரோந்து சென்ற இந்தியன் இராவணுவ சிப்பாய்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலை தொடர்ந்து  இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் முன்னாள் பட்டிருப்பு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் புதல்வரான சக்கரவர்த்தி உட்பட பதினான்கு பேரை படுகொலை செய்தார்கள்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்ட பதினான்கு பேரினுடைய ஞாபகார்த்தமாக களுவாஞ்சிகுடி மக்களினாலும் முன்னாள் பட்டிருப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான சி.மூ.இராசமாணிக்கம் அவர்களின் குடும்பத்தினரும் இணைந்து அமைத்தள்ள நினைவுத்தூபி திறப்பு விழாவும் உயிர் நீர்த்தவர்களின் நினைவு தினமும்  அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று காலை களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி  செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப்பேருரையும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பட்டிருப்பு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் குடும்பத்தின் உறுப்பினர்கள்  உயிரிழந்தவர்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

30வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக இந்த நினைவுகூரல் நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.