சட்டவிரோத மதுவிற்பனையை முற்றாக கைவிடும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க முடியும்.

ஒரு சில குடும்பங்கள் தான் இவ்வாறான சட்டவிரோதமான மது விற்பனையில் ஈடுபடுகின்றன, அந்த குடும்பங்கள் முற்றாக அதனை கைவிட வேண்டும், இளைஞர்களாகிய நீங்கள் மற்றும் பொலிஸார் இணைந்து கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,  அவ்வாறான குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு எமது முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினுடாக வாழ்வாதார உதவிகள் வழங்க முடியும் .

அந்த வகையில் இந்த விடயத்தில் வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் இணைந்து செயற்படவும் நாம் தயார் என முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மா.சசிகுமார் இளைஞர்கள் மத்தியில் குறிப்பிட்டார். 

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் ரி.விமல்ராஷ் தலைமையில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒருங்கிணைப்பில்  No drugs நாம் Youth.  " போதைப் பொருளற்ற நாடு " எனும் தொனிப்பொருளில் இளைஞர் போதைத் தடுப்பு சமூகநல விழிப்புணர்வு வேலைத்திட்டம்  இன்று வெள்ளிக்கிழமை  ( 29.10.2017) வவுணதீவு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.


இந்த வேலைத்திட்டத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையிலிருந்து இளைஞர்களை  விடுவிப்பதற்கும், மதுபானம் போதைப்பொருள் தடுப்பு மற்றும் உபாய வழிமுறைகளை முன்னெடுப்பதற்கும் சிந்திப்பதற்குமான தெளிவூட்டல்  ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இளைஞர்களே உங்களது கரங்களில்தான் இந்த பிரதேசத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது, பொறுப்புணர்ந்து இன்று முதல் நீங்கள் ஒவ்வொருவரும் முதலில் சபதம் எடுத்துக்கொள்ளுங்கள் தவறான ஒழுக்கத்துக்கு கேடான மது மற்றும் போதை பாவனைக்கு நான் ஆளாக மாட்டேன் என்றும், அதற்கு இன்னுமொருவரை ஆளாகமல் தடுப்பதற்கும் , அதுவே உங்களது,  உங்கள் குடும்பத்தின் கல்வி பொருளாதார முன்னேற்றத்திற்கும் குடும்பத்தின் ஒற்றுமை மகிழ்ச்சிக்கும் வழிகோலும் என அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.


 மண்முனை மேற்கு,  மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்                   வி. விஜயகுமார், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் பி.ரி.நஸீர், ஈச்சந்தீவு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குருக்கள் இரா அருளானந்தம் குருக்கள் ஆகியோருடன் இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி,
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளர் சா.கிருபைராசா, மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை செயற்குழு நிருவாகிகளான எம்.அருணன் எஸ். சுசி தி.தயாநிதி, வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் K.சதீஸ்குமார்,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி அ.தர்ஷிக்கா  ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


இதன் போது  போதைப்பொருள் மற்றும் மது தடுப்பு நடவடிக்கைகளுக்காக

பிரதேச போதைத் தடுப்பு குழு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த வேலைத்திட்டத்தில் மண்முனைமேற்கு பிரதேசத்தை சேர்ந்த அனைத்து கிராமசேவகர் பிரிவுகளிலிருந்தும் பெருமளவான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.