தமிழ் தேசிய கூட்டமைப்பினை தவிர யாரும் உள்ளுராட்சி சபை உருவாக்குவது தொடர்பான ஆட்சேபனையை தெரிவிக்கவில்லை –சீ.யோகேஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபை உருவாக்கப்படுதல் தொடர்பில் ஆட்சேபனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே கட்சியாக பதிவுசெய்தது.ஐ.தே.கட்சியிலோ,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலோ தமிழ் மக்களு;கு சேவைசெய்வதாக கூறிக்கொள்ளும் தமிழ் பிரதிநிதிகள் எவரும் எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை. யாரும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றபோது நடுவில் நுழைந்து  குழப்புகின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி  பிரதிநிதிகளும் தமது  கட்சியின் சார்பாக எந்தவொரு ஆட்சேபனையும் மாவட்ட செயலகத்திற்கு தெரிவிக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களுக்குள் புகுந்து அதனை குழப்பும் வகையிலான செயற்பாடுகளை தமிழ் தேசிய முன்னணியை சேர்ந்தவர்கள் மேற்கொண்டுவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அரசியல் நிலமைகள் தொடர்பிலும் தேசிய அரசியல் நிலமைகளும் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடாகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மாகாணசபைகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேச சபைகள் உருவாக்கப்படவும் சில பிரதேசசபைகளை தரமுயர்த்துவது தொடர்பிலான சில முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த 16ஆம் திகதி மக்களின் அபிப்பிராயங்களை கோரியிருந்தனர்.இதனடிப்படையில் கோறளைப்பற்று மத்தி என்கின்ற ஒரு பிரதேசசபையும் கோறளைப்பற்று தெற்கு என்னும் ஒரு பிரதேசசபையும் காத்தான்குடி மாநகரசபையோடு இன்னுமொரு காத்தான்குடி பிரதேசசபையினையும் உருவாக்குகின்ற முன்மொழிவாக கொண்டுவரப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று பிரதேசபையின் கீழ் தான் கோறளைப்பற்று தெற்கும் கோறளைப்பற்று மத்தியும் இதுவரை காலமும் இருந்துவந்தது.அவையிரண்டும் இரண்டு பிரதேசசபைகளாக உருவாக்கப்படும்போது கோறளைப்பற்று என்பது தனியான பிரதேசசபையாகவோ நகரசபையாகவோ உருவாகுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.கோறளைப்பற்று பிரதேசசபையாகவே இன்று உள்ளது.எதிர்காலத்தில் நகரசபையாக மாற்றப்படலாம்.

இதேவேளையில் கோறளைப்பற்று தெற்கு கோறளைப்பற்று மத்தி பிரதேசசபைகள் உருவாகுவதில் சில சிக்கல் நிலைகள் காணப்படுகின்றன.கோறளைப்பற்று தெற்கு 18கிராம சேவையாளர் பிரிவுகளைக்கொண்டது.கோறளைப்பற்று மத்தி கிராம சேவையாளர் பிரிவு 08 கிராம சேவையாளர் பிரிவினைக்கொண்டுள்ளது.

எங்களது கோரிக்கை பிரதேச செயலாளர் பிரிவு பிரதேசசபையாக உருவாக்கப்படவேண்டும்.கோறளைப்பற்று தெற்கு பிரதேசசபை உருவாக்கப்படும்போது அப்பிரதேச செயலக பிரிவில் உள்ள 18கிihம சேவையாளர் பிரிவுகளும் அதில் உள்ளடக்கப்படவேண்டும்.அதேபோன்று கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் உள்ள 08கிராம சேவையாளர் பிரிவுகளையும் இணைத்து கோறளைப்பற்று மத்தி பிரதேசசபை உருவாக்கப்படலாம்.

கோறளைப்பற்று மத்தி பிரதேசசபை உருவாக்கப்படும்போது அருகில் உள்ள தமிழ் பகுதிகளை இணைப்பதற்கு முனையக்கூடாது.கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன,ஜெயந்தியாய என்னும் இரண்டு கிராமங்கள் புனாணை கிழக்கு பகுதியில் உள்ளது.அது தற்காலிகமாக கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளதை கோறளைப்பற்று மத்தி பிரதேசசபைக்குள் உள்வாங்கமுடியாது.

ரிதிதென்ன,ஜெயந்தியாய என்னும் இரண்டு கிராமங்களையும் நிலத்தொடர்பு அற்றவகையில் கோறளைப்பற்று மத்திக்குள் உள்வாங்கமுற்பட்டால் கோறளைப்பற்று மத்தியில் இருக்கின்ற தமிழ் கிராமமமான தியாவட்டவான் கிராமம் கோறளைப்பற்று வடக்குடன் இணைக்கப்படவேண்டும்.இதுவே எனது முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகவுள்ளது.

அதேபோன்று ஓட்டமாவடி பிரதேசபையில் உள்ள புனானை மேற்கு,கள்ளிச்சை,வடமுனை,ஊத்துச்சேனை,வாகனேரி ஆகிய கிராமங்கள் முற்றுமுழுதாக கோறளைப்பற்று தெற்கிற்குள்வரவேண்டும்.
கடந்த காலத்தில் கோறளைப்பற்று மேற்கில் இருந்த கிராமங்கள் குறித்த பிரதேசசபையினால் பல வழிகளிலும் புறக்கணிக்கப்பட்டது.அன்றாடம் குடிநீருக்கும் அந்த பகுதி மக்கள் கஸ்டங்களை எதிர்நோக்கினர்.கோறளைப்பற்று பிரதேசபையில் இருந்து நாங்கள் குடிநீர்களை அனுப்பியுள்ளோம்.வீதி புனரமைப்பு உதவிகளைக்கூட கோறளைப்பற்று பிரதேசசபையில் இருந்துபெற்றுக்கொடுத்துள்ளோம்.குறித்த ஐந்துகிராமங்களும் கோறளைப்பற்று தெற்குடன் இணைக்கப்படவேண்டும்.
பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்படும்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவினை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழ் பகுதிகளினால் ஊடறுத்து செல்கின்ற செயற்பாடும் நடைபெற்றிருக்கின்றது. மாவட்ட செயலகத்தில் புள்ளிவிபர வழங்கல் பிரிவில் அந்த செயற்பாடு நடைபெற்றிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்ட புள்ளிவிபரவியல் திணைக்களம் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குள் கோறளைப்பற்று மத்திக்குரிய இடங்களையும் குறித்திருக்கின்றது.இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். ஏனெனில் கடந்த காலங்களில் புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் தமிழர்கள் உயரதிகாரிகளாக இல்லாமல் சகோதர இனத்தினை சேர்ந்தவர்கள்தாள் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய இனம் சார்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றார்கள். இதை வன்மையாக கண்டிக்குமுகமாக கடந்த 22ஆம் திகதி கோறளைப்பற்று இலங்கை தமிழரசுக்கட்சி கிளை ஒன்றுகூடலில் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்படுத்த வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றினோம்.

பிரதான வீதியையும் தாண்டி கோறளைப்பற்றுக்குரிய பிரதேசசெயலகம், பிரதேசசபை, இந்து,கிறிஸ்தவ, பொது மயானம், வங்கி போன்ற பலவும் கோறளைப்பற்று மத்திக்குள் உள்வாங்கப்படுகின்றன. பிரதான வீதியையும் தாண்டி அந்த வரைபு இடம்பெற்றிருக்கின்றது. இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். மாவட்ட செயலகம் பிழையான தகவலை, பிழையான நடைமுறையை இதுவரை கையாண்டு வருகின்றது. இதனால்தான் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த வேண்டுமென்று அரசியல்வாதிகள் என்ற ரீதியில் நாங்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம்.

தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் எமது வேண்டுகோளிலே கோறளைப்பற்றில் ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தை 24ஆம் திகதியான நேற்றைய தினத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். இது தமிழர்களின் பிரச்சனை. ஆகவே கட்சிபேதமற்ற முறையில் சகலரையும் இணைத்துக்கொண்டு இதனை நடத்த வேண்டும் என்ற வகையில் பொது அமைப்புக்கள்,தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் உட்பட ஏனையோரையும் இணைத்து கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான போராட்டம் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.இந்தப் போராட்டம் அரசியல்வாதிகள் நடத்துவதாக அமையக்கூடாது, மக்கள் நடத்துவதாக அமைய வேண்டும் ஆகவே அரசியல்வாதிகள் அதிலே பங்குபற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் எங்களது பிரதிநிதிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியிருந்தோம். அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க நான் மகஜரை கையளிப்பதற்காக கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு சென்றிருந்தேன்.
ஆனால் நாங்கள் நடத்திய போராட்டத்தில் தமிழ் மக்கள் என்ற ரீதியில் புகுந்த நாடுகடந்த தமிழீழத்தின் உறுப்பினர்களாக இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் சொத்துகளுக்கு அதிபதியாக இருந்து லண்டனிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளான தயானந்தமூர்த்தி அவர்களும் அவரது குழுவினர்களும் அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் சைக்கிள் சின்னத்திலான கட்சி பிரதிநிதிகளும் மகிந்த ராஜபக்சவின் பிரதிநிதிகளும் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பிக்குவின் கீழ் இயங்குகின்ற சிலரும் அங்கு கலந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய கட்சிகள்தான் இந்த நல்ல செயலை செய்ததுபோல காட்டுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் என்னையும் விமர்சித்து எதிரான கோஷங்களையும் எழுப்பி பெரும் புரளியை ஏற்படுத்தினார்கள். உண்மையில் இதனை ஏற்பாடு செய்தவர்கள் நாங்கள் தான்.

25ஆம் திகதியோடு பிரதேச சபைகள்,மாநகர சபைகள் கோறளைப்பற்று தெற்கு,கோறளைப்பற்று மத்தி, காத்தான்குடி மாநகர சபை ஆக்குதல் போன்றவற்றிற்கு ஆட்சேபனை தெரிவித்து மனு சமர்ப்பிக்கின்ற நிகழ்வு முடீவுறுகின்றது. இந்த நிலையில் இந்த மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கு தாங்கள் சேவையாற்றுகின்றோம் என்று கூறிக்கொள்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் பிரதிநிதிகள் எவரும் தமது கட்சியின் சார்பாக எந்த முன்மொழிவையும் மாவட்ட செயலகத்திற்கு வழங்கவில்லை.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் பிரதிநிதிகளும் தமது  கட்சியின் சார்பாக எந்தவொரு ஆட்சேபனையும் மாவட்ட செயலகத்திற்கு தெரிவிக்கவில்லை. அதேபோல் யாரும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றபோது நடுவில் நுழைந்து  குழப்புகின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி  பிரதிநிதிகளும் தமது  கட்சியின் சார்பாக எந்தவொரு ஆட்சேபனையும் மாவட்ட செயலகத்திற்கு தெரிவிக்கவில்லை.
தமிழ் மக்கள் மேல் அக்கறை இருந்திருந்தால் அவர்களின் நிலங்கள், இருப்பிடங்கள், எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கரிசனை இருந்திருந்தால் தமிழ் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்துகின்ற இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்டு குழப்புகின்ற செயற்பாட்டில் ஈடுபடுவது கூச்சலிடுவது மிகவும் கேலிக்கூத்தான செயற்பாடாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலங்கள் அமைக்கப்படவேண்டும் என 2010ஆம் ஆண்டு காலம் தொடக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துவருகின்றது.முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராஜா,பா.அரியநேத்திரன் நான் பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் இந்த பாலம் அமைக்கப்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் குரல்கொடுத்துவந்துள்ளோம்.

இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,எஸ்.வியாழேந்திரன் உட்பட நான் எங்கெங்கு பாலங்கள் அமைக்கப்படவேண்டும் புனரமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

அண்மையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எமது தலைவர் சம்பந்தர் ஐயா ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவைப்பாடுகள் தொடர்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.அது சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி தலைமையில் இயங்குகின்ற தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சு கிட்டத்தட்ட ஆறு பாலங்களை அமைக்க முன்வந்தது.அதற்காக நடவடிக்கையெடுத்த ஜனாதிபதிக்கு இந்தவேளையில் நன்றி தெரிவிக்கவேண்டும்.

மண்டூர் –குறுமண்வெளி பாலமானது 1200 மில்லியனில் கட்டப்படவுள்ளது.இந்த பாலம் அமைக்கப்படவேண்டும் என்பதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராஜா,பா.அரியநேத்திரன் ஆகியோர் மிக தீவிரமாக செயற்பட்டவர்கள்.

கடந்த வருடங்களில் இந்திய அரசாங்கத்தினால் அந்தப் பாலம் புனரமைப்பதற்கான ஏற்பாடு தயாராகியிருந்தது. பாலங்களை புனரமைக்க வேண்டும் என்ற நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதற்கான அளவீடுகளை எடுத்து மாவட்ட செயலகத்திற்கு வழங்கியிருந்தது. மாவட்ட செயலகமும் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சிற்கு பாலங்களின் பெயர்களையிட்டு அதற்கான முன்மொழிவுகளை கொடுத்திருந்தது. அவர்களின் பங்களிப்பும் இதில் இருந்ததை கூறியாகவேண்டும்.

அவர்களின் முன்மொழிவினதும் எங்களின் வேண்டுகோளினதும் பிரகாரம் மாண்புமிகு ஜனாதிபதியினால் பாலங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டது. மண்டூர் –குறுமண்வெளி பாலம், சந்திவெளி-திகிலிவெட்டை பாலம், நரிப்புல்தோட்டம்-பங்கிடாவெளி பாலம், கிண்ணையடி-முருக்கன்தீவு பாலம், ராணமடு-மாலையர்கட்டு பாலம், கிரான் பாலம் போன்றவைகளே அவையாகும்.
கிண்ணையடி-முருக்கன்தீவு பாலத்தை அமைப்பதற்காக 850மில்லியனும் சந்திவெளி-திகிலிவெட்டை பாலத்தை அமைப்பதற்காக 1200மில்லியனும் நரிப்புல்தோட்டம்-பங்கிடாவெளி பாலத்தை அமைப்பதற்காக 650மில்லியனும் கிரான் பாலத்தை அமைப்பதற்காக 1531 மில்லியனும் ராணமடு-மாலையர்கட்டு பாலத்தை அமைப்பதற்காக 120மில்லியனும் மண்டூர் –குறுமண்வெளி பாலத்தை அமைப்பதற்காக 1200மில்லியனும் தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சினால் ஒதுக்கப்பட்டது.
மேலதிகமாக கல்குடா வரை செல்கின்ற நீளமான வீதி புனரமைப்பதற்காக 3000மில்லியனும் இன்னுமொரு வீதிக்கு 722மில்லியனுமாக மொத்தம் 8000மில்லியன் ஒதுக்கப்பட்டது.

அண்மையில் குருமண்வெளி பாலத்தை அமைப்பதற்கான அடிக்கல் இடும் வைபவம் நடைபெற்றது. இதற்காக நிதியை ஒதுக்கிய மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தான் வந்து பாலத்திற்கான கல்லை நாட்டி வைப்பாரென நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். அந்த வைபவம் திடீரென ஏற்பாடாகியிருந்தது. பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் கணேசமூர்த்தி அவர்கள் இந்த ஏற்பாட்டை செய்வதாக அறிந்தோம்.

உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்தப் பாலத்திற்கான நிதிகள் ஒதுக்கித் தரப்படவில்லை. கௌரவ நெடுஞ்சாலைகள் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்களிடம் பல தடவைகள் அந்தப் பாலத்திற்கான முன்மொழிவுகளை பலதடவை கொடுத்திருக்கின்றோம். பாராளுமன்றத்தில் அவருக்கு முன்னே பேசியிருக்கின்றோம். ஆனால் அவருடைய நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நிதி ஒதுக்கப்படவில்லை. ஜனாதிபதியின் கீழ் இருக்கின்ற தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சே நிதியினை ஒதுக்கியது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளே நிகழ்வை நடத்தினர்.

இந்தப் பாலத்தை கொண்டுவந்ததில் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளராக இருக்கின்ற கணேசமூர்த்தி அவர்களுக்கு எந்தவித சம்பந்தமுமில்லை. அவர் நெடுஞ்சாலைகள் உயர் கல்வி அமைச்சிடம் கதைத்து பாலத்திற்கான நிதியை கொண்டுவந்திருந்தால் அது வரவேற்கத்தக்கது.

அன்று அழைக்கப்படவேண்டிய ஜனாதிபதியோ தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சின் பிரதிநிதிகளோ அதன் செயலாளர் சிவஞானஜோதி அவர்களோ மாவட்ட செயலகமோ இதில் இணைக்கப்படாது பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் இதை தான் செய்வதாக காட்டி தான் பாலத்தை கொண்டுவந்ததாக காட்டி இந்த ஏற்பாட்டை செய்திருந்தார். இது வேதனைக்குரிய விடயமாகும். இன்று உண்மையில் இலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டியது நீலவர்ணமாகும். ஆனால் அலங்கரிக்கப்பட்டது பச்சை வர்ணமாகும்.

ஆகையால் நாங்கள் ஏனைய பாலங்களுக்கான அடிக்கல் நாட்டுவதற்கு ஜனாதிபதி வருகை தரவேண்டும் என கோரியிருக்கின்றோம். அவர்தான் நிதியை ஒதுக்கித் தந்தார். நெடுஞ்சாலைகள் அமைச்சரை பொறுத்தவரை அவர் நல்லவர்,நேர்மையானவர், எங்களுக்கு பல வழிகளில் உதவுபவர்.அவரை நான் குறை கூறவில்லை. ஆனால் தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சின் பிரதிநிதிகளையும் அழைத்திருக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரான கணேசமூர்த்தி அவர்கள் பாலத்தை தான் கொண்டுவந்ததாக பொய் உரைத்திருக்கக் கூடாது.

கிழக்கு மாகாணத்தில் நாங்கள் பதினொரு ஆசனங்களை வைத்திருந்தும் முதலமைச்சர் பதவியை பெறாமல் போனது துரதிஷ்டமான விடயமாகும். சம்பந்தன் ஐயா அவர்கள் எப்போதும் நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தையே முன்வைப்பவர். வடக்கு கிழக்கு எப்போதும் தமிழ் பேசும் மக்களின் பிரதேசமாக இருக்க வேண்டுமென்பதில் விருப்புடையவர். முதலமைச்சராக தமிழர் ஒருவரை கொண்டுவருவதற்காக நாங்கள் முயற்சித்தபோது தமிழ் பேசும் ஒருவர் தான் முதலமைச்சராக வரவேண்டுமென்ற குறிக்கோளில் இருக்க வேண்டும் எனஅவர் எங்களிடம் சொன்னார்.

முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் எங்களுடன் இணைய விரும்பியிருக்கின்றார்கள், அவ்வாறு நிகழும்போது நாங்கள் ஆட்சியமைப்பது இலகு, ஆகவே தமிழ் பேசும் ஒருவர் முதலமைச்சராக வருவதில் பிரச்சனை இல்லை என அவர் சொன்னார். சம்பந்தன் ஐயா அவர்கள் வடக்கு கிழக்கு ஒன்றாக இணைக்கப்படும்போது  படித்த, நேர்மையான முஸ்லிம் இனத்தை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக வைப்பதற்கு தயார் என்ற கருத்தையும் கூறியிருக்கின்றார். அவர் கிழக்கு மாகாண சபையில் எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றார் என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.

தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்குகின்ற விடயத்தில் மூன்று விடயங்கள் அடங்குகின்றன. வடக்கு கிழக்கு இணைக்கப்படக்கூடாது, வடக்கு கிழக்கு இணைய வேண்டும், வடக்கு கிழக்கு இணைந்தால் நிலத் தொடர்பு அற்ற வகையில் முஸ்லிம்களுக்கு ஒரு மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பனவாகும். இது சார்பான ஆராய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எது சாத்தியப்படும் என்பதனை இப்போது கூறமுடியாது.
அண்மையில் பாராளுமன்றத்தில் எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் அரசியற் கைதிகள் விடுதலை விடயம் தொடர்பில் நியாயமான,விரிவானதொரு உரையை வழங்கியிருந்தார். கடந்த காலங்களில் கிளர்ச்சி செய்த ஜே.வி.பியினரைகூட பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்த விடயத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆகையால் தமிழ் அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும், சட்ட ரீதியாக மொழி என்பது முக்கியமானது, நீதிமன்றத்தில் அவர்களது மொழியில் உரையாடுவதற்கும் வாதாடுவதற்கும் சுதந்திரமிருக்கின்றது, ஆகவே வழக்கினை வவுனியா நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார். அதை பார்த்திருந்தால் அவர் அரசியற் கைதிகள் விடுதலை விடயம் தொடர்பில் எந்தளவிற்கு அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார் என்பது புரிந்திருக்கும். அவர் தொடர்ந்தும் ஜனாதஜபதியுடனும் பிரதமருடனும் அரசியற் கைதிகள் விடுதலை விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்.

மகிந்த ராஜபக்ச அவர்கள் எப்பொழுதும் சர்வாதிகார ஜனாதிபதி முறையையும் தான் ஆட்சி செய்த யாப்பையுமே கருத்தில் கொண்டிருப்பார். அதனால்தான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்காகவே நாங்கள் குரல் கொடுக்கின்றோம் என ஆர்ப்பாட்டங்களையே தங்களது வாழ்க்கையாக கொண்டிருக்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மக்கள் புதிய அரசியல் யாப்பினை நிராகரிக்க வேண்டுமென அறிக்கை விட்டிருக்கின்றார். இன்னும் புதிய அரசியல் யாப்பு வரவில்லை. அதற்கான இடைக்கால அறிக்கையே வந்திருக்கின்றது. அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் கூட சிலவேளை மாறலாம். புதிய அரசியல் யாப்பில் என்ன இருக்கின்றது என்பது தெரியாமலே அதை எதிர்க்கின்றார்கள்.

நீண்டகாலமாக தமிழ் மக்கள் பல தியாகங்களை செய்து ஒரு அரசியல் தீர்விற்காக காத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஏதோ ஒரு வகையில் ஆதிய அரசியல் யாப்பு வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ் மக்களின் சுயாட்சி ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையில் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வகையில் நியாயமான அரசியல் தீர்வு எங்களுக்கு கிடைக்க வேண்டும். அது அந்த யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தி நாங்கள் எங்கள் கட்சியின் சார்பான முன்மொழிவுகளை கொடுத்திருக்கின்றோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த மக்களுக்கு எதனை பெற்றுக்கொடுக்கப் போகின்றார்?மீண்டும் மக்களை ஆயுதம் ஏந்த சொல்லப்போகின்றாரா? அவரது சிந்தனை என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை.

நாங்கள் இன்னும் மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியாது. எங்கள் பிரதேசங்களின் அபிவிருத்தியை இழக்க முடியாது. ஏதாவதொரு தீர்வை பெற்று மக்களின் அபிவிருத்திகள்,அன்றாட வாழ்வாதாரங்கள்,அரசியல் தீர்வு என்பவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவையெல்லாம் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். இதுவரை காலமும் இல்லாதவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் புதிய அரசியல் யாப்பினை உருவாக்குகின்ற பங்காளர்களாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அரசியல் யாப்பு வரும்முன்பே அதை நிராகரியுங்கள் என்று சொல்வது கேலிக்குரிய விடயமாகும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் வரும்போது அத்தனை தீர்வுகளையும் எதிர்த்தவர்களில் பௌத்த பிக்குகளும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். பண்டா செல்வா ஒப்பந்தம் உட்பட்ட தீர்வுகள் கிடைத்தபோது அவற்றை எதிர்த்தவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள். தமிழ் மக்களுக்கு தீர்வுகள் வரும்போதெல்லாம் எதிர்ப்பதனால் பிரயோசனம் இல்லை. அவர்களுக்கேற்ற அரசியல் உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் இவ்விடயம் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கின்றோம். தற்போது வந்திருப்பது புதிய அரசியல் யாப்பல்ல. இடைக்கால அறிக்கையாகும்.