மட்டு.அரசாங்க அதிபர் நியமனத்தில் இழுபறி - சம்பந்தனை புறக்கணிக்கும் செயலாளர்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமிக்கும் விடயத்தில் எதிர்க்கட்சி தலைவர் இரா.  சம்பந்தன் அவர்களின் சொல்லை கேட்கமுடியாது என உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நில் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ். எம். சாள்ஸ் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் புதிய அரசாங்க அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் செயலாளர் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர்  சிறினேசன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ். எம். சாள்ஸ் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் புதிய அரசாங்க அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக மட்டக்களப்பு சிவில் சமூகம் மற்றும் பொது அமைப்புகள் ஆளும் கட்சி அமைப்பாளர் ஆகியோரினால் பரிந்துரைக்கப்பட்ட  மூன்று அதிகாரிகளில் ஒருவரை  நியமிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில்

நேற்றைய தினம்  அமைச்சர் அபயவர்த்தன மற்றும் அமைச்சின் செயலாளர் நில் அல்விஸ் ஆகியோரிடம் இடம் பெற்ற கலந்துரையாடலில் குறித்த பெயர் பட்டியலில் உள்ள முதலாவது நபரை நியமிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்கள்  கேட்டுக்கொண்டபோது அதனை மறுத்த அமைச்சின் செயலாளர் தாங்கள் தீர்மானித்துள்ள நபரையே அரசாங்க அதிபராக நியமிப்பேன் மீறி சண்டை பிடித்தால் சிங்களவர் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்கவேண்டிவரும் என கூறியுள்ளார்.

இதேவேளை குறித்த அதிகாரியையே அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் என அரசாங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கணேசமூர்த்தி அவர்கள் பிரதமர் செயலகம் ஊடாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒரு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கத்தின் அமைப்பாளர்கள் சிவில் அமைப்புகள் ஊடக அமைப்புகள் எனப் பலரும் விடுத்த வேண்டுகோளை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் புறந்தள்ளி தனக்கு விரும்பிய ஒருவரை நியமிக்க முயற்சிப்பது செயலாளர் மீது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவந்ததில் முக்கிய பங்காளி கட்சியின் தலைவர் சிறுபான்மையினரின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும்  தலைவர் ஒருவரின் கருத்தையும் அவர் சார்ந்த சமூகத்தின் கருத்தையும் புறந்தள்ளி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தான் விரும்பும் அரசாங்க அதிபரையே நியமிப்பேன் என உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நில் அல்விஸ் தெரிவிக்க காரணம் என்ன?


இவரே முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ். எம். சாள்ஸ் அவர்களை வழிநடத்தியவர.; அவர் செய்த ஊழல்கள் அனைத்தையும் விசாரணை செய்யாது அவரை கடைசி வரை காப்பாற்றியவர்.

தற்போது புதிய அரசாங்க அதிபராக வேறு ஒருவர் வந்தால் தானும் முன்னாள் அரசாங்க அதிபரும் இணைந்து செய்த ஊழல்கள் வெளியாகி விடும் என்ற அச்சத்தில் தனக்கு ஏற்ற ஒருவரை தன்னிச்சையாக நியமிப்பதற்கு அமைச்சரின் செயலாளர் நில் அல்விஸ் முயற்சி செய்துவருகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகம் சீர்கெட்டு மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் நான்கு பிரதேச செயலாளர்கள் இல்லாது மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசேவைகள் பொது மக்களுக்கு முழுமையாக கிடைக்காது இருப்பதற்கு இவரே காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.