கல்லடி தொடக்கம் நாவற்குடா வரையான பகுதியை இணைத்து தனியான பிரதேசசபை அமைக்கவேண்டும்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கல்லடி தொடக்கம் நாவற்குடா வரையிலான பகுதியை இணைத்து புதிய பிரதேசசபையொன்றினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்கவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் பிரிவு வேண்டுகோள்விடுத்தள்ளது.

இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனங்களின் தலைவியுமான திருமதி செல்வி மனோகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் கடுமையான பாதிப்புக்குள்ளான மாவட்டமாக மட்டக்களப்ப மாவட்டம் காணப்படுகின்றது.அதில் மிகமோசமான முறையில் தமிழர்களே இதில் பாதிக்கப்பட்டனர்.

ஆனால் இன்று தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுவருகின்றனர்.இவ்வாறான நிலையில் காத்தான்குடியை மாநகரசபையாக மாற்றி மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சில பகுதிகளை இணைத்து பிரதேசசபை ஒன்றை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதி மக்களின் கருத்துகள் பெறப்படாத நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதனை நாங்கள் வன்மையாக கண்டிகின்றோம்.

கல்லடி பாலம் தொடக்கம் நாவற்குடா வரையில் 15 கிராமங்களையும் 09 கிராம சேவையாளர் பிரிவுகளையும் கொண்ட சுமார் 11ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களைக்கொண்ட பகுதியாக காணப்படுகின்றது.
இவற்றினை ஒன்றிணைத்து தனி பிரதேசசபையாக அமைக்குமாறு கடந்த காலத்தில் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதிலும் அவை புறக்கணிக்கப்பட்ட நிலையில் இன்று வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கும் செயற்பாடாகவே எமது கட்சி நோக்குகின்றது.எனவே கல்லடி பாலம் தொடக்கம் நாவற்குடா வரையில் உள்ள பகுதிகளை இணைத்து தனி பிரதேசசபையினை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இதற்கு அரசியல் பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படமுன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.