தமிழர்கள் மத்தியில் இருந்த குறுகிய எண்ணங்களால் கலைப்பொக்கிசங்கள் அழிந்தன –முன்னாள் அமைச்சர் இராஜதுரை

தமிழர்கள் மத்தியில் இருந்த சில குறுகிய எண்ணங்கள் காரணமாக பல கலைப்பொக்கிசங்கள்,அரிய மருத்துவ நூல்கள் அழிந்துவிட்டதாக முன்னாள் இந்துக்கலாசார அமைச்சர் செல்லையா இராஜதுரை தெரிவித்தார்.

சுவாமி விபுலானந்தரின் 125வது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஆரம்பமான விபுலானந்தர் மாநாட்டின் மாலை அமர்வு நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்துகலாசார திணைக்களம்,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகமும் இணைந்து இந்த மாநாட்டினை நடாத்திவருகின்றது.

மாலை நேர அமர்வு இந்துகலாசார திணைக்களம்,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் தலைமையில் ஆரம்மானது.

இந்த நிகழ்வில் முன்னாள் பிரதேச அபிவிருத்தி,இந்துக்கலாசார அமைச்சர் செல்லையா இராஜதுரை பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதன்போது விபுலானந்தர் மூலம் வெளிவந்த அற்றுகைகளை மையப்படுத்திய நடன நிகழ்வுகளும் இசைக்கச்சேரியும் நடாத்தப்பட்டது.

அத்தடன் முன்னாள் பிரதேச அபிவிருத்தி,இந்துக்கலாசார அமைச்சர் செல்லையா இராஜதுரை கௌரவிக்கப்பட்டதுடன் சுவாமி விபுலானந்தர் வரலாற்று அறிவுப்போட்டியில் திறமையினை வெளிப்படுத்திய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர்,
வெறும்காட்டுப்பகுதியில் இந்த விபுலானந்தா இசை நடனக்கல்லூரியை நான் உருவாக்கியபோது பலர் அது தொடர்பில் பல்வேறு எதிர்கருத்துகளை முன்வைத்தனர்,தூற்றினார்கள் அவற்றுக்கெல்லாம் நான் இடம்கொடுக்காமல் இதனை உருவாக்கினேன்.ஆனால் இறைவனின் அருளால் அதனை உருவாக்கினேன்.இன்று அந்த கல்லூரியில் இவ்வாறான நிகழ்வில் கலந்துகொள்ளும்போது நீண்ட காலத்திற்கு பின்னர் என் கண்ணில் நீர் கசிகின்றது.

விபுலானந்தருக்கு மணிமண்டபம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று தீர்மானித்து அதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டபோது பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டது.என்னை சொல்லமுடியாதளவுக்கு தூற்றினார்கள். விபுலானந்தருக்கு மணிமண்டபமா?இதுவெல்லாம் தேவையா எனக்கேட்டார்கள்.

சுவாமி விபுலானந்தர் நமக்கு கிடைத்த அருங்கொடை.விபுலானந்தருக்கு நினைவு ஒன்று அமைக்கவேண்டும்,அங்கு நூலகம் அமைக்கவேண்டும் என்று அவர் பிறந்த காரைதீவுக்கு நான் சென்றேன்.அதற்காக விபுலானந்தரின் உற்றார்,உறவினர்களிடம் காணிகேட்டேன்.சொந்தங்கள் யாரும் காணி தரமுன்வரவும் இல்லை,தரமறுத்தார்கள்.

இன்று அவரின் புகழ்பாடுகின்றோம்.அவரை பெருமைகொள்கின்றோம்.அவரின் சிறப்பினை பாடுகின்றோம்.இங்குமட்டுமல்ல கடல்கடந்து இந்தியாவிலும் வெளிப்பட்டன.கடந்த காலத்தில் இந்தியாவில் இருந்தே கருத்துரைகள் வழங்குவதற்கு அறிஞர்கள் வருகைதருவார்கள்.பேசுவதற்கும் அங்கிருந்துதான் பேச்சாளர்கள் வருவார்கள்.அந்த ஒற்றைவழிப்பாதையை உடைத்தெறிந்து இந்தியாவிற்கு சென்று இலங்கை தமிழர்களின் பெருமையினை நிலைநாட்டியவர் சுவாமி விபுலானந்தர் என்பதை யாரும் மறந்துவிடமுடியாது.அவ’வளவு பெருமைக்குரியவர் அவர்.

விபுலானந்தர் இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்றிலும் சிறப்பாக இருந்தவர்.நான் அமைச்சராக இருந்த காலத்தில் யாழ் நூலை மறு பதிப்பு செய்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் அதற்கான உரிமம் கிடைக்கவில்லை. அதற்காக மதுரைக்கு நான் பல தடவைகள் சென்றுள்ளேன்.இன்று அது மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் உலகுக்கு கிடைத்த பெரும் சொத்து சுவாமி விபுலானந்தர்.அதனை பத்திரப்படுத்தி பாதுகாக்கவேண்டியது நமது கடமையாகும்.சுவாமி விபுலானந்தர் பிறந்த இடத்தில் நூலகம் ஒன்றை அமைத்து அவரின் பொக்கிசங்களை பாதுகாக்க நினைத்தேன்.அதுமுடியவில்லை.அன்றைய காலத்தில் நம்மக்கள் மத்தியில் ஒரு பழக்கம் இருந்தது இவ்வாறான கடமைகளுக்கு யாரும் உதவமாட்டார்கள்.ஏதோ இவர்கள் வியாபாரம் செய்யப்போகின்றார்கள் என்று குறுகிய சிந்தனையில் கருதுவார்கள்.

இவ்வாறான எண்ணங்கள் காரணமாக எமது ஏராளமாக கலைச்செல்வங்கள் அழிந்துவிட்டன.விபுலானந்தரின் யாழ் நூல் மட்டுமல்ல ஏராளமான வைத்திய நூல்களும்,இலங்கையில் கிடைக்கப்பெறாத அரிய அற்புதமான வைத்தியநூல்கள் எல்லாம் மறைந்துபோய்விட்டன. ஆட்டாளைச்சேனைககு அருகில் கடற்கரை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றிக்கு சென்று அங்கிருந்த அற்புதமான வைத்திய நூல் ஒன்றை மீள்பதிப்புக்காக கேட்டேன்.அவர்கள் வழங்கமறுத்துவிட்டனர்.அவ்வாறு குறுகிய எண்ணங்கள் நம்மவர்கள் மத்தியில் இருந்தது.

தமிழ் எங்களது உயிருக்கு மேல்.எமது தமிழைபேச தமிழர்கள் தயங்குகினார்கள்.இன்றும் அந்த நிலை எமது தமிழர்கள் மத்தியில் இருக்கின்றது.ஒவ்வொரு செய்கையிலும் நாங்கள் தமிழழை நேசிக்கவேண்டும்.தமிழை தாய்மொழியாக கொண்டவர்களை நாங்கள் அணைக்கவேண்டும்.பாதுகாக்கவேண்டும்.அப்போதுதான் தமிழ் வாழும்.
எமது நிலைமையில் இருந்து உயர்ச்பெறுவதற்க எமக்கு கிடைத்தபெரும்பேறு தமிழ்.வரலாறு சொல்கின்றது.தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் பெருமைக்குரியவர்கள்.

இங்கிலாந்தில் இருந்து சமயப்பணியும் சமூகப்பணியும் செய்வதற்காக வந்த பெரும் மகானான ஜி.யு.பொப்.அவர் இந்தியாவில் இருந்தபோது தமிழைக்கற்றார்,தமிழில் மயங்கினார்.தமிழிலே தன்னை மறந்தார்.இறுதியாக தான் இறந்துபோனபின் தனது கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் துயில்கொள்கின்றான் என்று எழுதி வையுங்கள் என்று இறந்தார்.நான் இலண்டனுக்கு சென்றபோது பல்வேறு கஸ்டங்களுக்கும் தேடல்களுக்கும் மத்தியில் அந்த இடத்தினை பார்வையிட்டேன்.அவரது கல்லறையை தூய்மைப்படுத்து அதற்கு அஞ்சலி செலுத்தினேன்.

தமிழ் மொழியானது தமிழனை மட்டும் கவரவில்லை.பல மொழி பேசுபவர்களையும் தமிழ் கவர்ந்துள்ளது.தமிழர்களாக பிறந்த நாங்கள் பெரும் பாக்கியம் செய்தவர்கள்.யாரும் நான் ஏன் தமிழனாக பிறந்தேன் என்று நினைக்ககூடாது. தமிழனாக பிறந்ததற்கு நான் பெருமைப்படுகின்றேன் என்று நினைக்கவேண்டும்.

இன்னுமொரு பிறவி இருக்குமானால் நான் தமிழ் நாட்டில் பிறக்கவேண்டும் என்று சொன்னார் வட இந்திய பேரறிஞர் ஒருவர்.அவ்வாறான பெருமைகொண்ட இனத்தில் நாங்கள் பிறந்துள்ளோம்.வாழும் காலம் எல்லாம் தமிழை நேசிக்கவேண்டும்.

நிலாவினைக்காட்டி தமிழில் பாடல்பாடி சோறுட்டி வளர்க்கப்பட்ட நாங்கள் அந்த தமிழை மறக்ககூடாது.குழந்தைகளை அணைக்கும்பொதும் அழைக்கும்போதும் தமிழில் சொல்லி அழையுங்கள்.தமிழில் அழைக்கும்போது காதுகள் வழியாக இருதயத்தினை சென்றடைந்து அவர்கள் தமிழ் உணர்வாளர்களா வளர்வார்கள்.

வாழ்க்கையில் எத்தனையோ தடவைகள் எனக்கு உயர்போகக்கூடிய அபாயங்கள் ஏற்பட்டன.வவுனியாவில் என்னை துப்பாக்கியால் சுடவந்தார்கள். துறைநீலாவணையில் துப்பாக்கியால் சுடவந்தார்கள். துறைநீலாவனையில் இராணுவத்தினர் செய்த அட்டகாசங்களுக்கு எதிராக நானே துப்பாக்கிகளை துறைநீலாவனை மக்களுக்கு வழங்கினேன்.உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று.இலங்கை இராணுவத்திற்கு எதிராக புளிமரங்களில் ஏறிநின்று தாக்குதல் நடாத்தினார்கள்.இராணுவத்தினை துரத்தியடித்தார்கள்.ஏன் நான் இதனைக்கூறுகின்றேன் என்றால் தமிழ் எங்களை வாழவைக்கும் பெரும்மொழி.