மட்டக்களப்பில் வீடு உடைத்து பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி பாலத்திற்கு அருகில் புதிய டச்பார் வீதியில் உள்ள நகை உற்பத்தியாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த கொள்ளைச்சம்பவம் நடைபெற்றது.

நேற்று மாலை வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு வீட்டின் சாமி அறையில் இருந்த நகை பாதுகாப்பு பெட்டகம் அப்படியே கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதுடன் நகை உற்பத்தி நிலையத்தில் இருந்த அலுமாரியும் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சுமார் 68இலட்சம் ரூபா பெறுமதியுடைய சுமார் 1000 கிராம் நகைகள் பாதுகாப்பு பெட்டியுடன் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

வீட்டினுள் மிளகாய் தூளை தூவிவிட்டு இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் வீட்டில் நகை தொழில் செய்யும் நான்கு இளைஞர்கள் காத்தான்குடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த பகுதிக்கு விரைந்த மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.