49வது அருட்தந்தை வெபர் ஞாபகார்த்த கிண்ணம் மட்டக்களப்பு வசமானது

அருட்தந்தை வெபர் அடிகளாரின் ஞாபகார்த்தமாக 49வதுஆண்டாகவும் மட்டக்களப்பு மைக்கேல்மென் விளையாட்டுக்கழகம் நடாத்திய வெபர் ஞாபகார்த்த கிண்ண கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு சிவப்பு அணி வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

வெபர் ஞாபகார்த்த கிண்ண கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் உள்ளக கூடைப்பந்தாட்ட மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த சுற்றுப்போட்டியில் காலி,கம்பஹா,புத்தளம்,காலி,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரபல கூடைப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றின.
இறுதிப்போட்டியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.இதன் ஆரம்ப நிகழ்வு மைக்கேல்மென் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான பி.எம்.சுலோக்சன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிங்கர் நிறுவனத்தின் மட்டக்களப்ப பிராந்திய முகாமையாளர் சிரேஸ்ட முகாமையாளர் தாசன் சத்தியமூர்த்தி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் களுவாஞ்சிகுடி,காத்தான்குடி பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி,புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் அருட்தந்தை ஏ.ஏ.நவரெட்னம், புனித மைக்கேல் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதற்போது மட்டக்களப்பு சிவப்பு அணியினருக்கும் கம்பஹா அணியினருக்கும் இடையில் இறுதிப்போட்டி சிறப்பாக நடைபெற்றது.இறுதிப்போட்டியில் 74-59 என்ற புள்ளிகளின் அடிப்படையில் மட்டக்களப்பு சிவப்பு அணி சிறப்பான வெற்றினை பெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் முதல் இடத்தினை மட்டக்களப்பு சிவப்பு அணியும் இரண்டாம் இடத்தினை கம்பஹா அணியினரும் மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பு நீல அணியினரும் நான்காம் இடத்தினை யாழ் மாவட்ட அணியும் பெற்றுக்கொண்டது.

வெபர் ஞாபகார்த்த கிண்ண கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் சிறந்த வீரராக சிறந்த வீரராக கம்பஹா அணியின் வீரர் சஜித் ஜெயரட்ன தெரிவுசெய்யப்பட்டதுடன் இறுதிப்போட்டியின் சிறந்த வீரராக மட்டக்களப்பு சிவப்பு அணியின் நி.சிறிதர்சன் தெரிவுசெய்யப்பட்டார்.சுற்றுப்போட்டியின் சிறந்த வளர்ந்துவரும் வீரராக யாழ் மாவட்டத்தினை சேர்ந்த அணியின் யோ.சிம்ரோ தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட கூடைபந்தாட்ட துறைக்கு ஆரம்பமுதல் ஆர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மூத்த வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.