49வது ஆண்டாகவும் நடக்கும் வெபர் கிண்ண சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத்துறையின் தந்தையென வர்ணிக்கப்படும் அருட்தந்தை வெபர் அடிகளாரின் ஞாபகார்த்தமாக மைக்கேல்மென் விளையாட்டுக்கழகம் நடாத்தும் இலங்கையில் உள்ள பிரபல கழகங்கள் பங்குபற்றும் மாபெரும் கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமானது.

49வது ஆண்டாகவும் இந்த சுற்றுப்போட்டியை மைக்கேல்மென் விளையாட்டுக்கழகம் புனித மைக்கேல் கல்லூரியின் கூடைபந்து விளையாட்டு மைதானத்தில் நடாத்துகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு மைக்கேல்மென் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான பி.எம்.சுலோக்சன் தலைமையில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை,மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜயக்கொட ஆராய்ச்சி, புனித மைக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா,கல்லூரியின் அபிவிருத்திக்குழு தலைவர் ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூடைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் இலங்கையில் உள்ள மட்டக்களப்பு , காலி , புத்தளம் ,பதுளை ஆகிய மாவட்டங்களில் இருந்து முன்னணி  கழகங்கள் பங்குபற்றிவருகின்றன.

நேற்று மாலை நடைபெற்ற முதல் போட்டியில் மட்டக்களப்பு நீல அணியும் யாழ் அணியும் மோதிக்கொண்டதில் மட்டக்களப்பு நீல அணி வெற்றிபெற்றது.இதேபோன்று மட்டக்களப்பு சிவப்பு அணிக்கும் கம்பஹா அணிக்கும் இடையிலான போட்டியில் கம்பஹா அணி வெற்றிபெற்றுள்ளது.

இதன் இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ள நிலையில் இந்த சுற்றுப்போட்டியினை காண பெருமளவான விளையாட்டு ரசிகர்கள் வருகைதருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வின்போது புனித மைக்கேல் கல்லூரியின் கூடைபந்தாட்ட வளர்ச்சிக்காக மைக்கேல்மென் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான பி.எம்.சுலோக்சனால் ஒரு தொகை நிதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.