கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஒட்டுமொத்த கிழக்கு மக்களுக்கான முதலமைச்சரா? அல்லது ஒரு இனத்துக்கான, பிரதேசத்துக்கான முதலமைச்சரா? மாவட்ட சம்மேளன தலைவர் கேள்வி.

பிரதமரின் பத்துலட்சம் தொழில் வாய்ப்பு வாக்குறுதிக்கு என்னாச்சு?? மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தலைவர் கேள்வி.

கடந்த 2015ம் வருடம் ஜனவரி எட்டில் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்கு முன்பாக இந்த நாட்டினுடைய கெளரவ பிரதமர் பத்து இலட்சம் தொழில்வாய்ப்புக்களை இளைஞர்களுக்கு வழங்குவதாகவே தேர்தல் மேடைகளில் வாக்குறுதி அளித்திருந்தார்,

அந்த வாக்குறுதியை பாராளுமன்ற தேர்தலின் போதும் வழங்கியிருந்தார் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து செல்லும் நிலையில் இளைஞர்களுக்கு வழங்குவதாக சொல்லப்பட்ட அந்த வேலைவாய்ப்பு வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது?  வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதா?அல்லது அதற்க்கான முன்னெடுப்புக்கள் ஏதேனும் நடைபெறுகிறதா? என மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.திவ்வியநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று பிற்பகல் வெளியிட்ட தனது பிரத்தியேக ஊடக அறிக்கையிலே அவர் இந்த கேள்வியை எழுப்பியிருந்தார். அவர் மேலும் தனது ஊடக அறிக்கையில் நான் இந்த மாவட்டத்திற்க்கான இளைஞர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்புக்கு தலைவன். அந்த வகையில் இந்த மாவட்டத்தில் இளைஞர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை நன்கறிவேன். மாவட்டத்தில் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் இல்லாத பிரச்சினை பாரிய பிரச்சினையாக உள்ளது. இதனாலேதான் அதிகமான சமூக பிரச்சினைகள் ஏற்படுகின்றன,  இளைஞர்கள் இளவயதிலே அரபுநாடுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர். இது எமது மாவட்டத்தில் மாத்திரமே உள்ள பிரச்சினை அல்ல முழு நாட்டுக்குமான பிரச்சினையாக உள்ளது.

நல்லாட்சியாளர்கள் கொடுத்த வாக்குறுதிக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.  வெறுமனே வாக்குறுதியாக அமைந்துவிடக்கூடாது.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில்  பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், முன்னெடுக்கப்பட்டதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறுகிறார். வேடிக்கையான வேதனையான விடயம் இந்த முதலமைச்சரால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இனவிகிதாசாரப்படிதான் முன்னெடுக்கப்பட்டனவா ? நூற்றுக்கு பத்து வீதம் கூட தமிழர் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவில்லை. இளைஞர்கள் உட்பட தமிழ் மக்கள் பலத்த விசனத்துடன் இருக்கின்றனர்.

இதனால் தான் நான் கேட்கிறேன் கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஒட்டுமொத்த கிழக்கு மக்களுக்கான அமைச்சரா? அல்லது ஒரு இனத்துக்கான, பிரதேசத்துக்கான அமமைச்சரா என்று. நன்றாக அவதானித்தால் இந்த விடயம் பாமர மக்களுக்கு நன்கு புரியும்.

பிரதமரை அழைத்து வந்து வேலைத்திட்டங்கள் சிலவற்றினை மக்கள் பாவனைக்காக கையளித்தும் சில திட்டங்களை ஆரம்பித்தும் வைத்துள்ளார் நமது முதலமைச்சர். அவற்றில் காத்தான்குடி ஏறாவூர் நகர் என முஸ்லிம் பிரதேசங்களில் மூன்றும் தமிழ் பிரதேசத்தில் ஒரு திட்டத்தினையுமே ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதனால் தான் எமது இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.  ஏனெனில் இந்த முதலமைச்சரால் முன்னெடுக்கப்ட்ட அபிவிருத்திகள் அவ்வாறுதான் உள்ளது.

மேலும் பிரதமரின் தொழில் வாய்ப்பு வாக்குறுதியை நிறைவேற்ற இந்த முதலமைச்சர் எடுத்த காத்திரமான நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர்.