கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும்.


(பழுகாமம் நிருபர்)
'என்னுடைய சுயலாபத்திற்காக தமிழ் மக்களின் எதிர்காலத்தை மழுங்கடிக்கச் செய்யமாட்டேன்' என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 சமகால அரசியல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கிழக்கு மாகாண சபை தேர்தல் மிக விரைவாக நடைபெற வேண்டும், ஏனென்றால் தமிழர் ஒருவர் கிழக்கில் முதலமைச்சராக வரவேண்டும் என விரும்புகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அரசியல் சாணக்கியம் மற்றும் அனுபவம் கொண்ட ஒருவர் வரவேண்டும். தற்போது அரசியல் பின்ணணி இல்லாத, அரசியல் அனுபவம் இல்லாத முகங்களை உள்வாங்குவதாக தமிழர்களின் அரசியல் கலாசாரம் சென்று கொண்டிருக்க்கின்றது. அவ்வாறு இருக்கக்கூடாது. காரணம், புதிதாக வருபவர்கள் அரசியல் மற்றும் அறிமுகங்களை பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலைமை உள்ளது. அவ்வாறில்லாமல் அரசியலில் கைதேர்ந்தவர்களும், அனுபவமிக்க எதிர்காலத்தை பற்றி சிந்திக்க கூடியவர்களே முதலமைச்சராக வர வேண்டும். அவ்வாறெனின் தற்போதைய நிலையில் சுதந்திர கட்சியிலோ மற்றும் ஐக்கிய தேசிய கட்சியிலோ அரசியல் சாணக்கியம் உள்ள தமிழர்கள் யாரும் இல்லை. கிழக்கு மாகாண சபைக்கு ஒரு தமிழ் முதலமைச்சரை கொண்டுவருவதற்கு நான் ஆதரவு வழங்கி இன்னும் பலம் சேர்ப்பேன்  ஏனென்றால் தமிழ் சமூகத்தின் மீது நலன் கருதி நான் எடுத்த முடிவு தான் இது. வருகின்ற முதலமைச்சர் மத்திய அரசோடு இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தமிழர் பிரதேசங்களுக்கு அபிவிருத்திகளை கொண்டு வருவதற்கான ஆளுமை மிக்கவராகவும் இருக்க வேண்டும். 
கிழக்கு மாகாண விவசாய அமைச்சரினால் போரினால் பாதிக்கப்பட்ட  கரடியனாறு பிரதேசத்தில் சேவைக்கால பயிற்சி நிலையத்தினை ஜனாதிபதியை கொண்டு திறந்து வைத்ததனூடாக சிறந்த அரசியல் நல்லிணக்கத்தினை உருவாக்கியுள்ளனர். மத்திய அரசில் எதிர்கட்சியாகவும், மாகாணத்தில் ஆட்சியின் பங்குதாரர்களாகவும் இருந்து கொண்டு ஜனாதிபதியை மாகாண விவசாய அமைச்சரினால் கொண்டு வரப்பட்ட அபிவிருத்திக்கு ஜனாதிபதியை பிரதம விருந்தினராக அழைத்து திறந்து வைத்த நிகழ்வு இதுவே முதற்தடவையாக இருக்கும். அதுமட்டுமல்ல சமகாலத்தில் தமிழ் அரசியல்வாதி ஒருவரின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட பெரிய அபிவிருத்தி திட்டமும் ஆகும். மாகாண விவசாய அமைச்சரை போல் ஒருவர் முதலமைச்சராக வந்தால் வரவேற்கத்தக்கது. தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதில் மும்முரமாக இருக்கின்றார் என்பதை மத்தியில் எதிர்கட்சியாக உள்ள த.தே.கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்தமை முன் அறிகுறியாக தென்படுகின்றது எனவும்,
இந்த செய்தியை படிப்பவர்கள் நினைக்கலாம் நான் கூட்டமைப்புக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருக்கின்றேன். அவ்hறு இல்லை. தமிழ் மக்களின் நலன் கருதி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நான் வெளியிடும் அறிக்கை தான் இது. எனக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு விசுவாசமாகவும் செல்லப்பிள்ளையாக இருந்தால் யாழ் மாவட்டத்தில் அங்கஜனுக்கு தேசிய பட்டியல் கிடைத்ததைப் போன்று எனக்கும் தேசிய பட்டியல் மூலம் கிடைக்கலாம். என்னுடைய சுய இலாபத்திற்காக தமிழ் மக்களை பயன்படுத்த நான் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.