கிராமப்புற சமுகத்தினிடையே விழிப்பேற்படுத்தும் மாணவர் எழுச்சி நிகழ்வு

(ஆ.நிதாகரன்)  கிராமப்புற சமுகத்தினிடையே விழிப்பேற்படுத்தும் மாணவர் எழுச்சி நிகழ்வு

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் எல்லைப்புறக் கிராமமான காக்காச்சிவட்டையில் உள்ள, பலாச்சோலை அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (17.09.2017) ஒரு தொகை இசைக்கருவிகள், போஷாக்கு உணவு, மற்றும் அப்பியாசப் புத்தகங்கள் அத்துடன் சான்றிதழ்களும் என்பன வழங்கி பாராட்டி ஊக்குவிக்கப்பட்டனர்
.
கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருணைமலைப்பிள்ளையார் ஆலய பிரதம குரு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின், மனிதவள அபிவிருத்தி சபையின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், ஆலயத்தலைவர், மற்றும் நலன்விரும்பிகள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு பல நிகழ்வுகளை ஒன்று சேர்த்து, ஒருங்கிணைக்கப்பட்டு கவனிப்பாரின்றிக் கிடக்கும் எமது கலாசாரம், கலை, வாழ்வியல், பாரம்பரியம், விழிமியம் போன்றவற்றினை விழிப்படையச் செய்யும் , ஆற்றுப்படுத்தும் ஒரு நிகழ்வாகவும் இருந்தது. இங்கு மாணவர்கள் பல தமிழ் கமழும் ஆற்றுகைகளை கிராமத்து மரநிழல் அரங்கில் அளிக்கை செய்தமை பாராட்டத்தக்கதொன்றாக மகிழ்சி நிறை தருணமாக இருந்தது.

“இக்கிராமத்திலுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கூட்டு வழிபாட்டை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டும ஒரு தொகை இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த கூட்டு வழிபாட்டின் ஊடாக பக்தி, இசை மற்றும் ஒருமைப்பாடு தொண்டு மனப்பாங்கு என்பனவற்றை பொதுமக்களிடையே வளர்ப்பதை நோக்காகக் கொண்டு இவை வழங்கப்பட்டு வருகின்றன” என கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தனது தலைமையுரையின் போது தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில் “பாடசாலை மட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற கஸ்ட்ட, அதிகஸ்ட்ட பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றவர்கள்தான் ஒட்டு மொத்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உணவை உற்பத்தி செய்து வழங்குகின்ற விவசாயிகளாக இருக்கின்றனர். இருந்தபோதிலும், மேற்கூறிய காரணங்களினால் நலிவுற்ற ஒரு சமூகமாக இவர்கள் காணப்படுகின்றனர். இவர்களை நாங்கள் சென்று அவர்களுடன் அளவளாவி அவர்களை கல்வியின் பால் ஊக்கப்படுத்த எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நாம் இழந்த கல்வியினை மீளக்கொண்டுவரும் பாரிய சக்தியாக இருக்கும். அதற்கு இன்னும் எங்களிடையே ஒன்றுபட்ட செயற்பாடும் தியாக மனப்பான்மையும், அர்ப்பணிப்பும் அத்துடன் தொண்டாண்மையும் இயல்பாக அமையப்பெறனும் அதற்கான கள முயற்சியினையே எமது இச்சபை எடுத்து வருகின்றது. அதற்கு இந்நிகழ்வில் பாரிய வேலைப்பழுவிலும் கலந்துகொண்டிருக்கும் அதிகாரிகளே சாட்சி. அதுபோல் நாடுகடந்திருந்தாலும் நாடும்போது உதவும் உள்ளங்களை மனமார இந்த மன்றில் பாராட்டுவதோடு, அவர்கள் எமக்கு தோழ்கொடுப்பது ஒரு பெரிய உத்வேகத்தினை தருகின்றது.' என சபையின் தலைவர் திரு.த.துஷ்யந்தன் தனது தலைமையுரையில் மேலும் தெரிவித்தார்.

' வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் அவர்கள் ' எமது பாரம்பரியம், கலைவடிவங்கள், பண்பாடுகள் என்பன சிதைவடயாமல் இருக்க தெரிவுசெய்யப்பட்ட பின்தங்கிய கிராமங்களுக்கு சென்று இவ்வாறான சேவைகளை செய்து வருவது அந்தக்காலத்தில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய பணியை, எழுச்சியை என் கண் முன்னே கொண்டு நிறுத்துகின்றது. எமக்கு தேவை எழுச்சியே அந்த எழுச்சி எல்லா வகையான நல்லவற்றுக்கும் முன்னிற்கவேண்டும். அதன் மூலம்தான் நாங்கள் இழந்த அனைத்தினையும் மீளப்பெறலாம். ஆகவே இவ்வாறான அறநெறிப்பாடசாலைகளை தொடங்கி ஊக்குவித்து அவற்றை ஏனைய எமது உறவுகளினுடைய உதவியில் நடைமுறைப்படுத்த சேமமுடன் பாடுபடும் கி.இ.இ.ச.ச.அ.சபையினரின் அயராத முயற்சி நிச்சயம் பலன் தரும். இவை தொடர என்னால் அனைத்து உதவியும் செய்து தரப்படும்' என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

'மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களுள் ஒன்றாகும். யுத்தம், அனர்த்தம், வறுமை, வேலையின்மை போன்ற இன்னோரன்ன காரணங்களால் மீண்டெழுந்து வர முடியாமல் வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற அதிக மக்களைக் கொண்ட ஒரு மாவட்டமாகும். குறிப்பாக எமது மாவட்டம் கல்வியில் வறுமையை அதிகளவில் கொண்ட ஒரு பிரதேசமாகும். காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுபத்தைந்து சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் பின்தங்கிய வசதிவாய்ப்புகள் அற்ற கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். அதிலும் எல்லைப்புறக்கிராமங்களில் ஒன்றான இக்கிராமம் பல இன்னல்களை சந்தித்து வருகின்றபோதும் கல்வி சார் முன்னேற்றங்களை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் எனவும், எமது கல்விதான் எமக்கு சொத்து, அதை எந்த கடினமான சூழலிலும் கைவிடக்கூடாது எனவும்” அதிதியாகக் கலந்து சிறப்பித்த உதவிப்பணிப்பாளர் திரு.சி.தணிகசீலன் அவர்கள் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் “பாமரர்களாகிய பொது மக்களை வாழ்க்கை போரட்டதிருக்கு தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி , உறுதியான நல்ல ஒழுக்கத்தையும் , பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிபடுத்தப் பயன்படாத கல்வி , அதை கல்வி என்று சொல்வது பொருத்தமா? எத்தகைய கல்வி தன்னம்பிக்கை தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும் படி செய்கிறதோ ,அது தான் உண்மையான கல்வியாகும்” என சுவாமி விவேகானந்தர் முழங்கிய வழி சொந்தக்காலில் நிற்பதற்கான கல்வியே எமக்கு அவசியம், இது இல்லாத காரணத்தினால்தான் நாம் இன்னொருவரிடம் பிச்சை கேட்க்கவேண்டியுள்ளது.

அதிதிகளின் உரையினை தொடர்ந்து மாணவச்செல்வங்களினது கலை நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக இடம்பெற தொடர்ந்து சபையின் செயலாளர் கலாவதி அவர்களின் நன்றி உரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது .
Add caption