வாழைச்சேனையில் நில அபகரிப்பினை தடுத்து நிறுத்துமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துவதுடன் அபகரிக்கப்பட்ட தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய பொதுமக்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது காணியை மீட்டுத்தருமாறு கோசங்களை எழுப்பிய பொதுமக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் பாராமுகமாக இருப்பதாகவும் கவலை தெரிவித்தனர்.

இருப்பதையும் இழப்பதா நல்லாட்சி தமிழருக்கு தந்த பரிசு,பிரதேச செயலாளரே அநீதியின் பக்கம் சோரம்போகாமல் எமக்கு நீதிபெற்றுத்தருவீர்கள் என நம்புகின்றோம்,மாணவர்களுக்கு சொந்தமான மைதானத்தை மீட்டுத்தாருங்கள்,எமது பிரச்சினைகளை தீர்த்து தராத அரசியல்வாதிகள் இருந்தும் என்ன பயன்?போன்ற சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்  ஏந்தியிருந்தனர்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறாவோடை,வாகனேரி,ஆலங்குளம்,குகனேசபுரம்,புணானை உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக தமிழர்களின் காணிகள் ஏனைய சமூகத்தில் உள்ள சிலரால் அபகரிக்கப்படும் நிலையில் அதனை தடுக்க எந்த நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லையெனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சில சகோதர இனத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களின் துணையுடன் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் அதனை தடுப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் யாரும் இதுவரையில் முன்வரவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கல்குடா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் நகர்ப்பகுதியில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கி;னறனர்.

கடந்தகால யுத்தம் காரணமாக உயிரிணையும் உடமையினையும் இழந்து நின்ற சமூகத்தின் நிலங்களும் இன்று அபகரிக்கப்படுவதாகவும் அவர்கள்  தெரிவிக்கின்றனர்.

இதன்போது வாழைச்சேனை பிரதேச செயலாளர் வாசுதேவனிடம் மகஜர் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கையளிக்கப்பட்டது.இது தொடர்பில் முடிந்த நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாக  பிரதேச செயலாளர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உறுதியளித்தார்.

குறித்த பிரச்சினைகளை தீர்த்து இப்பகுதியில் இரு இனமக்களும் நல்லுறவுடன் வாழும் நிலையினை ஏற்படுத்துமாறும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இனங்களிடையே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் எனவும் இங்கு ஆர்ப்பாட்டக்காரர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.