இலங்கையில் மாற்றத்திற்கான பொறுப்பு இந்த நாட்டு பிரஜைகள் ஒவ்வொருவரதும் கரங்களிலே தங்கியுள்ளது.

கிடைத்திருக்கின்ற இந்த ஜனநாயக இடைவெளியை அர்த்தமுள்ளதாக்க இந்த நாட்டு அரசியல் வாதிகள் முதல் பிரஜைகள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய தருணமிது.

ஜனாதிபதி ஒருவருக்கு  இரண்டு தடவைதான் ஆட்சிக்காலம் அப்படியிருக்கையில் ஏன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆயுள் பூராகவும் ஆட்சியில் இருப்பதற்கு முடிகிறது????
மாறி மாறி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எந்த ஜனாதிபதி வந்தாலும் இவர்களில் மாற்றமில்லை. நிலையான கொள்கையுமில்லை. பாராளுமன்ற உறுப்புரிமை என்பது பூர்வீக சொத்தாகவே எடுத்துக்கொண்டுள்ளனர்.

எமது நாட்டில் யுத்தத்துக்கு முன்னரும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போதும் யுத்தத்துக்கு பின்னரும் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியில் இருந்தவர்கள், இவர்கள் சாதித்ததுதான் என்ன?? இனியும் சாதிக்க போவதுதான் என்ன??

உண்மையான சமாதானத்தை நல்லிணக்கத்தை இவர்களால் எப்படி கொண்டு வரமுடியும்??? இன்றைய எமது பாராளுமன்ற பிரதிநிதிகள் அரசியலை முழுநேர ஆயுள் கால தொழிலாக்கி வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். அதற்கு புரையோடிய இனவாத புண் ஆறாமால் பாதுகாக்க வேண்டுமென்பதில் மிகக்கவனமாக உள்ளனர்.

எனவேதான் மாற்றம் வேண்டும் அதற்கு கற்றறிந்தவர்கள், புதியவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்தியல் தற்போது பரவலாக மேலெழுகின்றது, இதனை தவிர்க்க முடியாது. காலத்தின் தேவை இது.

அதன் மூலம் தான் சுபீட்சமான நீடித்த நிலையான அபிவிருத்தியுடன் கூடிய, அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க முடியும்.

கேட்க கூடும் கற்காதவர்கள் அரசியல் செய்ய மாட்டார்களா? காமராஜர் போன்ற பலரை உதாரணமாக முன்னிறுத்தி.  சமகாலத்தில் ஒரு உதாரண புருஷனையேனும் தேடிப்பார்க்க முடியவில்லை.

இன்றைய எமது நாட்டு ஆட்சியாளர்களில் 90-100 பேர் வரை சாதாரண தர கல்வித்தகமையும் கொண்டிருக்கவில்லை  என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதியவர்களா?? அரசியலுக்கு அனுபவம் வேண்டும் என்பீர்கள்.  பழுத்த அனுபவசாலிகள் தான் இன்று புரையோடிப்போன இனவாதத்தோடு மதவாதத்தையும் நீறு பூத்த நெருப்பாக பற்றவைத்துள்ளனர். என்பதனையும் சிந்தித்து பார்க்கவேண்டும்.

அரசியலுக்கு இளைஞர்களா?!! என்ன விளையாட்டுத்தனம், சிறுபிள்ளைத்தனமான கருத்து சிறுபிள்ளை வேளான்மை வீடு வந்து சேருமா என்பீர்கள். கனடாவின் இன்றைய ஆட்சியாளரையும் அந்த நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையையும் ஆராய்ந்தால் விடை கிடைக்கும்.

உண்மையில் பழுத்த, இரண்டுதடவைக்கு மேல் ஆட்சிக் கதிரையை சூடாக்கியவர்கள் சுயநலமின்றி
எமது நாடு,
எமது மக்கள் என்ற எண்ணத்தோடு நீடித்த நிலையான நிம்மதியான ஒரு நல்லிணக்கத்தோடு கூடிய இங்கு வாழும் பல்லிணத்தன்மை கொண்ட மக்கள் ஜக்கியமாக வாழ வேண்டும் என்ற பொது நோக்கோடு அரசியலிருந்து ஒதுங்கிக் கொண்டு வழி விட வேண்டும் இளைஞர்களுக்கு.

விடுவார்களா??? இவர்களின் அரசியல் முதலிடு, பெரிதும் பின்னடைவு காணுமே. பெரும்பான்மை சிங்களவர்களாகட்டும் சிறுபான்மையினராக வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் யாவருமே சிந்திக்க வேண்டும்.

நாம் கண்ணை மூடிக்கொண்டு அறியாமையால் வழங்கும் கண்மூடித்தனமான ஆதரவு வாக்குப்பலம்தான் இவர்களின் பிற்போக்குத்தனமான செயற்பாடுகள்.

இந்த அரசியல்வாதிகள் தான் எமது நாட்டில் ஓடிய இரத்த ஆற்றுக்கும் இன்றுள்ள நிலையற்ற எதிர்காலம் குறித்த அச்சத்துடனான வாழ்வுக்கு காரணமானவர்கள் . இவர்கள் தங்களது இருப்புக்காக இரண்டு உணர்வு பூர்வமான ஆயுதங்களால் நம்மையறியாமலேயோ நம்மை ஆட்டிப்படைக்கிறார்கள். நாம் தமிழன், நாம் சிங்களவன், நாம் முஸ்லிம் ,நாம் இந்து, நாம் பெத்தர்கள், நாம் இஸ்லாமியர்கள். என்ற இனவாத
 தீயை பற்றவைத்து

இவர்கள் யாரும் நாம் இலங்கையர் என்றோ அல்லது நாம் மனிதர் என்றோ கூறிக்கொண்டு இன்னல் பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை, வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் நிலையான அபிவிருத்தியோடு நாட்டை முன்கொண்டு செல்லவும் முன்வரவில்லை.

அவ்வாறு கூறிக்கொண்டு வரும் ஆட்சியாளர்களும் ஆட்சியைபிடிக்க ஒன்றும் ஆட்சியில் அமர்ந்த பின்  ஒன்றுமாக, கதிரைக்கு வர வாரி வழங்கிய  தங்களது வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுகின்றனர். இந்த நிலை நல்லாட்சியிலும் தொடர்கின்றது.

இந்த நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை அல்லது அதில் திருத்தம் வேண்டும்.  அது நீதியான நிலையான அர்த்த புஸ்டியுள்ளதான அனைத்து சமூகங்களினதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். ஏனெனில், இன்று வடகிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே காணி மற்றும் நில அபகரிப்பு தொடர்பாக முரண் பாடுகள் முற்றிக்கொண்டு செல்கின்றன. இந்த இடத்தில் சட்டம் ஒழுங்கு தனது கடமையை சரிவர செய்ததாக காணமுடியவில்லை.  இதில் போதுமான ஏற்பாடுகள் இருக்கின்றதா? இல்லையா? என்ற சந்தேக வினாவை ஏற்படுத்துகின்றது. அவ்வாறாயின் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்ன?

எனவேதான் பொது மக்கள் இளைஞர்கள் எமது நாட்டுக்காக, நாட்டின் முன்னேற்றத்திற்க்காக சிந்திக்க வேண்டிய காலகட்டமிது.