பிரபல ஆயுர்வேத வைத்தியரும் சமூக சேவையாளருமான கூழாவடியை சேர்ந்த நடராஜா காலமானதாக அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல ஆயுர்வேத வைத்தியரும் சமூக சேவையாளரும் தமிழ் பற்றாளருமாக கந்தப்பன் நடராஜா தனது 81வது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஆரையம்பதியை பிறப்பிடமாகவும் கூழாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் இப்பகுதியில் அளப்பரிய சேவையினையாற்றியுள்ளார்.

கூழாவடியில் இந்து இளைஞர் மன்றத்தினை உருவாக்கி அதற்கான கட்டிடங்களையும் அமைத்து இந்துப்பணியாற்றிவந்த இவர்,மட்டக்களப்பு ஆயுர்வேத சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் மண்முனை வடக்கு ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் தலைவர் உட்பட பல்வேறு அமைப்புகளில் தலைவராகவும் உறுப்பினராகவும் இருந்து சமூகப்பணியாற்றிவந்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து தமிழ் மக்களின் போராட்டங்களுக்கும் பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ள இவர் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு கல்லியங்காட்டில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.