கிழக்கு பல்கலைக்கழகத்தில் பதற்றம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக பகுதியை சிங்கள மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளதன் காரணமாக அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கள மாணவர்கள் தொடர்ச்சியான கவன ஈர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டுவந்த நிலையில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து இன்று மாலை பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் பகுதி மற்றும் நிர்வாகப்பகுதிகளை மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் தாக்கப்பட்டு செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

மாலை தொடக்கம் நடைபெற்றுவரும் இந்த நிலைமை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தபோதிலும் இரவு 08.00மணி வரையில் பொலிஸார் வரவில்லையெனவும் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்தன.