பரா விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணி

விசேட தேவையுடையவர்களின் தேசிய தமிழ் பரா விளையாட்டு போட்டியின் கிரிக்கட் போட்டியில் கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழ் பரா விளையாட்டின் மற்றும் ஒரு போட்டியான பார்வையற்றவர்களுக்கான சத்தப் பந்து 20 க்கு 20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணம் ஸ்டான்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலாவது சுற்றில் யாழ் அணியை வீழ்த்தி  வடக்கு மாகாண வன்னி விழிப்புலனற்றோர் சங்க அணி வெற்றி பெற்றது.

அடுத்ததாக வடக்கு மாகாண வன்னி விழிப்புலனற்றோர் சங்க அணிக்கும் கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணிக்கும் இடையில் இடம்பெற்ற சுற்றுப்போட்டியில் நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணியின் தலைவர் ஆ. ஜதீஸ் வடக்கு மாகாண வன்னி விழிப்புலனற்றோர் சங்க அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணியினர் தமது 103 என்ற இலக்கினை 15 ஓவர்களில் நிறைவு செய்து 5 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றனர்.

2017 ம்   ஆண்டிற்கான தமிழ் பரா போட்டியின் சாம்பியனாக கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணி வெற்றி வாகை சூடிக்கொண்டதுடன் இந்த ஆண்டுக்கான சம்பியனாகவும் தெரிவுசெய்யப்பட்டது.