கிழக்கின் சமர்: சிவானந்தா தேசிய பாடசாலை அணி இரண்டாவது ஆண்டாகவும் வெற்றி

கிழக்கின் சமர் எனப்படும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் அணிக்கும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மிசன் தேசிய பாடசாலை அணிக்கும் இடையிலான சிவராமா கிண்ணம் 2017 போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை அணி வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் அணிக்கும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மிசன் தேசிய பாடசாலை அணிக்கும் இடையிலான இந்த கிழக்கு சமர் ஆரம்பமானது.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் எஸ்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் அனுர டி சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் எம்.உதயகுமார்,இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் உபதலைவர் என்.ரி.பாறூக்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறப்பாக நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதல் பாதி போட்டி முடிவில் சிவானந்தா தேசிய பாடசாலை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற இறுதி பாதி போட்டியிலும் இரண்டு கோல்களைப்பெற்ற சிவானந்தா தேசிய பாடசாலை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் சிவானந்தா தேசிய பாடசாலை அணி வெற்றிபெற்றுள்ளதுடன் மூன்று வருடங்களாக நடாத்தப்பட்ட இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மிசன் தேசிய பாடசாலை அணி வெற்றிபெற்றுள்ளது.

போட்டியினை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றதுடன் இரண்டு பாடசாலைகளுக்கும் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தினால் உதைபந்துகளும் அன்பளிப்பு செய்யப்பட்டன.