மட்டக்களப்பில் பொதுமக்களின் காணிகளை திட்டமிட்டு அபகரிக்கும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை திட்டமிட்டு அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கோவில்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியில் சிலர் அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டதற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடாத்தியுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோவில்குளம் பகுதியில் உள்ள தனியார் காணிக்குள் தமக்கும் காணிகள் உள்ளதாக கூறி சிலர் வேலிகளை அகற்ற முற்பட்டபோது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தவேளையில் அவர்கள் அங்கிருந்துசென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குறித்த காணி உரிமையாளர்கள் தமது வேலிகளின் கட்டைகள அகற்ற முற்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் சிலர் பரம்பரையாக வாழ்ந்த பகுதியெனவும் சிலருக்கு 1973ஆம் ஆண்டு மரமுந்திரிகை செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்ட காணியெனவும் அதற்கான உறுதிகள் உள்ளதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு எழுதப்பட்ட காணி உறுதிப்பத்திரங்களுடன் தமது காணிகளுக்குள் அத்துமீறி நுழைந்த சிலர் வேலிகளின் கட்டைகளை கழட்டி அத்துமீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே காணி பிரச்சினை தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் விசேட கூட்டம் நடாத்தப்பட்டு தமது காணிகள் என உறுதிப்படுத்தப்பட்ட காணியிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் சிலர் தம்மீது அழுத்தங்களை பிரயோகிக்க முனைவதாகவும் குற்றஞ்சாட்டும் காணி உரிமையாளர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தமிழர் ஒருவர் தான் குறித்த காணியை வாங்கியுள்ளதாக தெரிவித்துவந்த நிலையில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் சிலர் வந்துதமது காணியின் வேலிகளை அகற்றமுனைவதாகவும் இது தமக்கு சந்தேகத்தினை ஏற்படுத்துவதாகவும் காணி உரிமையாளர்கள் இங்கு தெரிவித்தனர்.

கடந்தகால யுத்த சூழ்நிலையில் தாங்கள் தமது காணிகளில் குடியிருக்க முடியாத நிலையிருந்தபோதிலும் அவற்றினை பராமரித்துவந்தாகவும் அங்கிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த பிரச்சினை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி பிரச்சினையென்பது பூதாகரமான பிரச்சினையாக மாற்றம்பெற்றுவருவதாகவும் சிலரின் செயற்பாடுகளே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.