தேசிய இளைஞர் பரிமாற்ற திட்டத்தில் கேகாலை இளைஞர் யுவதிகள் மட்டக்களப்பில்

கிழக்கினையும் தெற்கினையும் இணைக்கும் தேசிய நல்லிணக்க செயற்றிட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. கொள்கைத்திட்டமிடல் பொருளாதார நடவடிக்கை அமைச்சர்  பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்களின் வழிகாட்டல் ஆலோசனையின் கீழ்,  தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இந்த திட்டத்தினை நடாத்திவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தினையும் கேகாலை மாவட்டத்தினையும் இணைக்கும் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மண்முனைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது.

மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட காரியாலயத்தின் நெறிப்படுத்தலில் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகத்தின்  ஏற்பாட்டில் இன நல்லுறவுக்கான இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் மண்முனைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஈச்சந்தீவு கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கிடையிலான சகோதரத்துவம், ஒற்றுமை, நட்பு என்பவற்றினை வலுவூட்டுவதற்க்கான தேசிய வேலைத்திட்டம்   13.08.2017 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 17.08.2017 வியாழக்கிழமை  வரை ஈச்சந்தீவு  கிராமத்தில் நடைபெறவுள்ளது.கேகாலை மாவட்டத்திலிருந்து முப்பது இளைஞர் யுவதிகள் கொண்ட குழுவென்று ஈச்சந்தீவு கிராமத்திற்கு வருகைதந்துள்ளனர்.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை மண்முனைமேற்கு இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் க.சசீந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,எஸ்.வியாழேந்திரன்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களான திருமதி கே.கலாராணி,திருமதி அ.நிசாந்தினி மற்றும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் கேகாலை இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜனாதிபதியின் விசேட செய்தியும் இதன்போது கேகாலையில் இருந்து கொண்டுவரப்பட்டவர்களின் இங்கு வாசிக்கப்பட்டது.இந்த இளைஞர் குழு நான்கு நாட்கள் ஈச்சந்தீவு கிராம மக்களின் வீடுகளில் தங்கியிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புராதான இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன், கலை கலாச்சார நிகழ்வுகளிலும்,  சிரமதானம், ஆலய தரிசனம், போன்ற வேலைத்திட்டங்களிலும் ஈடுபடவுள்ளனர்.