கிழக்கு மாகாணசபை நீடிக்குமானால் ஆட்சி அதிகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வேண்டும் -ஜனா

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் நீடிக்கப்பட்டால் கிழக்கு மாகாணசபையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 11பேர் உட்பட தமிழ் உறுப்பினர்கள் அனைவரது ஆதரவினைக்கொண்டு கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்த மகளிர் கல்லூரியின் வரலாற்று சாதனையாளர் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக இராமகிருஸ்ணமிசன் தலைவர் சுவாமி பிரபுபிரபானந்த ஜி மகராஜ் கலந்துகொண்டதுடன் பிரதம விருந்தினர்களாக எஸ்.வியாழேந்திரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் ஏழு வாரங்களில் முடிவுற இருக்கின்றது.அதன் பின்னர் என்ன நடக்கப்போகின்றது என்பது தெரியாத நிலையிலேயே நாங்கள் உள்ளோம்.

கிழக்கு மாகாண மக்கள் ஐந்து வருடங்களே மாகாணசபைக்கு ஆணையினை வழங்கியுள்ளனர்.அந்த ஐந்துவருடம் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

கிழக்கு மாகாணசபையின் ஆயட்காலம் நிறைவடைந்ததும் அதற்கான தேர்தல் நடாத்தப்படவேண்டும்.மக்கள் ஆணையினை மீறிச்செயற்படுவதற்கு எவருக்கும் இடமில்லை.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சி நடாத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதை நாங்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் மூன்று இனங்கள் வாழ்கின்ற நிலையில் அவற்றில் மிகவும் குறைந்த நிலையில் உள்ள சிங்கள மக்களில் ஒருவர் ஆளுனராகவுள்ளார்.அத்துடன் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவராக இருக்கின்றார்.

ஆளுனர் ஆட்சி நிலவும்போது மாகாணசபையின் தவிசாளர் அடுத்த தேர்தல் வரும் வரையில் அதிகாரத்தில் இருப்பார்.அவரும் பெரும்பான்மையினத்தைசேர்ந்தவர் என்பதுடன் அவர் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கின்றார்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு ஆட்சி அதிகாரங்கள் ஆளுனரிடம் கையளிக்கப்பட்டால் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி இரண்டு பெரும்பான்மையினத்தவர்களின் கைகளில் இருக்கப்போகின்றது.இந்த நிலைமை ஏற்பட இடமளிக்ககூடாது.

அண்மையில் ரணில் மட்டக்களப்புக்கு வந்தபோது கிழக்கு மாகாணசபை இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படும் என்றும் அதற்கு நான் ஆதரவு வழங்கியதாகவும் சில இணையத்தளங்கள் எழுதியிருந்தன.

ரணிலுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது தமிழ் மாகாணசபை உறுப்பினர்களில் எவரும் வாய்திறக்காத நிலையில் நான் மட்டுமே கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம்.மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை உட்பட படுவான்கரை பகுதியில் போர்காலப்பகுதியில் எதுவித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை,தற்போதைய காலத்தில் அபிவிருத்திகள் செய்யக்கூடிய சூழ்நிலைகள் உள்ளது.படுவான்கரையினை மையப்படுத்தியதான அபிவிருத்தியை நோக்காக கொண்டு மாகாணசபைக்கு விசேட நிதிகளை ஒதுக்கீடுசெய்யவேண்டும்.அப்பிரதேசங்களை அபிவிருத்திசெய்யவேண்டும் என்று கோரினேன்.

அத்துடன் எழுவான்கரையினையும் படுவான்கரையினையும் மட்டக்களப்பு வாவி பிரிக்கின்றது.படுவான்கரை பகுதி மக்களின் போக்குவரத்துகள் இலகுபடுத்தப்படவேண்டும். மண்முனை பாலம்,பட்டிருப்பு பாலம்,வலையிறவு பாலம் ஊடாக மட்டுமே மக்கள் விரைவான போக்குவரத்தினை செய்யமுடியும்.மேலதிகமாக இரண்டு பாலங்களை வாவிக்கு குறுக்கே அமைப்பதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் ரணிலிடம் முன்வைத்தேன்.இதனை நான் மட்டுமே வலியுறுத்தினேன்.

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11ஆசனங்களைக்கொண்டுள்ளது,அத்துடன் ஏனைய மூன்று தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளனர்,அவர்களுடன் 14 தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளனர். கிழக்கு மாகாணசபையின் காலம் நீடிக்கப்படுமாகவிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கவேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் அந்த ஆட்சியில் இருக்ககூடாது.

இரண்டரை வருடகாலம் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள நிலையில் அதில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருந்துவருகின்றார்.

இந்த நிலையில் கிழக்கு மாகாணசபையின்ஆட்சி அதிகாரம் நீடிக்கப்படுமாகவிருந்தால் கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் தமிழருக்கு வழங்கப்படவேண்டும் என்பதுடன் அமைச்சரவையிலும் முக்கிய மாற்றங்களை செய்யவேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.

நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே கடந்த காலத்தில் பாதிப்புக்குள்ளான எமது பிரதேசத்தினை அபிவிருத்திசெய்யமுடியும் என்பதுடன் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும் ஓரளவு பூர்த்திசெய்துகொள்ளமுடியும்.