பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தில் வரலக்ஷ்மி பூஜை

அஷ்ட செல்வங்களையும் வாரிவழங்கும் வரலக்ஷ்மி விரதம் இன்றாகும்.இதனை முன்னிட்டு ஆலயங்களில் விசேட திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இன்று வரலக்ஷ்மி விரதத்தினை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

வரலக்ஷ்மி விரதம் என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னிப் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த விரதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுசிறப்புமிக்க பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தில் வரலக்ஷ்மி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.

பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ குகன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வரலக்ஷ்மி பூஜை வழிபாடுகளில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

பெண்கள் திருவிளக்குக்கு பூஜைகள் செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன் பிரதான விளக்குக்கு பூஜைகள் நடைபெற்று ஆலயத்தின் உள்வீதியுலாவும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து அடியார்களுக்கு வரலக்ஷ்மி காப்புக்கட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் நற்சிந்தனைகளும் வழங்கப்பட்டன.