காணி அபகரிப்பினை தடுத்துநிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் வழிபாடு,ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் காணி அபகரிப்பினை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரி மட்டக்களப்பில் விசேட மத நல்லிணக்க வழிபாடும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து இந்த வழிபாட்டினையும் கவன ஈர்ப்ப போராட்டத்தினையும் முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிங்கள-தமிழ் மறுமலர்ச்சிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பிள்ளையாரடி ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் பௌத்த வழிபாடுகளும் நடைபெற்றன.

மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிங்கள தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.

வழிபாடுகளை தொடர்ந்து மட்டக்களப்பு முறாவோடை சக்தி வித்தியாலயத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு உட்பட மட்டக்களப்பில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கு எதிரான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது அமைப்புகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள்,மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது காணி அபகரிப்புக்கு எதிரான சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததுடன காணி அபகரிப்புக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.

கடந்த 30வருட யுத்தத்தினால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட சமூகமாக தமிழ் சமூகம் உள்ள நிலையில் அவர்களின் காணிகளை சகோதர இனம் அபகரிக்கும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

அனைத்தையும் இழந்து நிற்கும் சமூகத்தினையும் இன்னும் ஒரு சமூகம் அபகரிக்க முனைவது கவலையானது எனவும் இங்கு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றதும் பஸ்களில் முறாவோடையை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பயணமானார்கள்.