இனநல்லுறவு பயணத்தில் இணையும் மண்முனைமேற்கு பிரதேசமும் கேகாலை மாவட்டமும்.

(சசி துறையூர்) கொள்கைத்திட்டமிடல் பொருளாதார நடவடிக்கை அமைச்சர்  பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்களின் வழிகாட்டல் ஆலோசனையின் கீழ்,  தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட காரியாலயத்தின் நெறிப்படுத்தலில் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகத்தின்  ஏற்பாட்டில் இன நல்லுறவுக்கான இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் மண்முனைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஈச்சந்தீவு கிராமத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கிடையிலான சகோதரத்துவம், ஒற்றுமை, நட்பு என்பவற்றினை வலுவூட்டுவதற்க்கான தேசிய வேலைத்திட்டம்   13.08.2017 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 17.08.2017 வியாழக்கிழமை  வரை ஈச்சந்தீவு  கிராமத்தில் நடைபெறவுள்ளது

 கேகாலை மாவட்டத்திலிருந்து முப்பது இளைஞர் யுவதிகள் கொண்ட குழுவென்று ஈச்சந்தீவு கிராமத்திற்கு வருகை தரவுள்ளனர்.

இந்த இளைஞர் குழு நான்கு நாட்கள் ஈச்சந்தீவு கிராம மக்களின் வீடுகளில் தங்கியிருந்து  மாவட்டத்தில் உள்ள புராதான இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன், கலை கலாச்சார நிகழ்வுகளிலும்,  சிரமதானம், ஆலய தரிசனம், போன்ற வேலைத்திட்டங்களிலும் ஈடுபடவுள்ளனர்.

 இவர்களை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில், இடம்பெறவுள்ளது.