உலக சுபீட்சத்திற்காக கொக்கட்டிச்சோலையில் ஆரம்பமானது மகா வேள்வி

உலக சபீட்சத்துக்காகவும் இலங்கைவாழ் மக்களுக்கு நல்லாசி வேண்டியும், நாட்டில் ஏற்பட்ட அகால மரணங்களால் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், அவைகளால் நாட்டுக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காகவும், இலங்கையில் மிகப் பெரிய தெய்வீக அருளாட்சி மலர்ந்து, அனைவரும் சபீட்சம் பெறும் நோக்கங்களுடன், இந்த மாபெரும் வேள்வி இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் ஆரம்பமானது.

கிழக்குமாகாணத்தின் பிரபல தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இந்த ஸ்ரீசுவர்ணகால பைரவ வேள்வியாக இந்த மாபெலு வேள்வி ஆரம்பமானது.

தென்னிந்தியாவின் கொல்லிமலையெனும் சித்தர்கள் வாழும் பூமியில் வாழும் சித்தர் மஹா பைரவ உபாசகர் காகபுசுண்டர் தருமலிங்க சுவாமிகள் தலைமையில், பிரபல சிவாச்சாரியர் விஸ்வப்பிரம்மரிசி நாராயணக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களும், மஹா அஸ்ட பைரவ உபாசகர்கள், யோகிகள், கேரள சாஸ்திர வேத விற்பன்னர்களான நம்பூதிரிகள், சித்தமுறைப்படி இந்த வேள்வியை நடாத்திவருகின்றனர்.

10,008 அபூர்வ காயகல்லு மூலிகைகளைக்கொண்டும்,  குதிரைகள்,யானைகளைக்கொண்டு நடாத்தப்பட்டுவரும் இந்த ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ மாபெரும் வேள்வியானது நாளை வெள்ளிக்கிழமை வரையில் நடைபெறவுள்ளது.

இந்தவேள்வியில் கலந்துகொள்வதன் மூலம் ஒருவரை பீடித்துள்ள துன்ப துயரங்கள்,நோய்கள்,கர்மவினைகள் நீங்கி சந்தோசமான வாழ்வினை எட்டமுடியும் என்பதுடன் பிதிர்களின் ஆத்மசாந்தியையும் மேற்கொள்ளலாம் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறான யாகம் ஒன்று நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.