மட்டக்களப்பில் சட்ட விரோத கசிப்பு விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை காரணமாக சட்ட விரோத கசிப்பு வடிசாரய நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற மதுவரித்திணைக்கள அதிகாரிகள் கிரான் வட்வான் பகுதியில் இரண்டு இடங்களில் இந்த சட்ட சட்ட விரோத கசிப்பு வடிசாரய நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது இரண்டு நிலையங்களிலும் இருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு நிலையங்களிலும் இருந்து 22லீற்றர் கசிப்புக்கான ஸ்பிரிட்டுகள் மீட்கப்பட்டதுடன் கசிப்பு காய்ச்சும் பொருட்களும் மீட்கப்பட்டதாக கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

குறித்த கசிப்பு நிலையம் சுற்றிவைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து குடும்பிமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கசிப்பு விற்பனைசெய்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தலைமையில் மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பரிசோதகர் செல்வக்குமார்,மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்களான குகனேசன்,பத்மசிவம்,ரஜனிக்காந்த் ஆகியோர் கொண்ட குழுவினரே இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை கொக்கட்டிச்சோலை பகுதியில் முற்றுகையின்போது கைப்பற்றப்பட்ட  சட்ட விரோத கசிப்பு உற்பத்தி பொருட்களும் கைதுசெய்யப்பட்ட நபரும் நேற்று செவ்வாய்க்கிழமை மட்;டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.றிஸ்வியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது குறித்த நபரை ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவித்ததுடன் எதிர்வரும் 21ஆம் திகதி மன்றில்ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.