பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயத்தில் முதன்முறையாக நடைபெற்ற வேட்டைத்திருவிழா

மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் வேட்டைத்திருவிழா முதன்முறையாக நேற்று சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மட்டக்களப்பு வாவியும் சமுர்த்திரம் சூழ்ந்த பெரிய கல்லாறு என்னும் பகுதியில் அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயம் அமைந்துள்ளது.

தென்முகமாக அமர்ந்திருந்து வேண்டிவரும் பக்தர்களுக்கு அருள்கடாட்சத்தையும் கல்வியையும் வாரி வழங்கும் முருகனாக இந்த ஆலயம் விளங்குகின்றது.

மிகவும் பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

மஹோற்சவ கால பிரதமகுரு சபரிமலை சாஸ்தான பீடாதிபதி விஸ்வப்பிரம்மஸ்ரீ ஐப்பதாஸ சிவாச்சாரியார் தலைமையில் நேற்று மாலை வேட்டைத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முருகப்பெருமான் குதிரை மேல் ஏறி மிகச்சிறப்பான முறையில் வேட்டைத்திருவிழா நடைபெற்றது.வேட்டைத்திருவிழாவினை தொடர்ந்து ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு பிராயச்சித்த அபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீசிவசுப்ரமணிய பெருமான் முத்துச்சப்புரத்தில் வலம் வரும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் நாளை திங்கட்கிழமை காலை பெரியகல்லாறு இந்துமகா சமுத்திரத்தில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.