பண்டைய மட்டக்களப்பும் சங்கமன்கண்டி இறக்காவில் சிவாலயமும்” எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியிடப்படவுள்ளது

பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான நா.நவநாயகமூர்த்தி எழுதிய “பண்டைய மட்டக்களப்பும் சங்கமன்கண்டி இறக்காவில் சிவாலயமும்” எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு 09ஆம் திகதி காலை 10மணியளவில் எளிமையான முறையில் அவரது இல்லமான அக்கரைப்பற்று பனங்காடு வானதி பவனத்தில் இடம்பெறவுள்ளது.

 இவ்வெளியீட்டு நிகழ்வில் அன்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நூல்வெளியீட்டு ஏற்பாட்டாளரும் நூலாசிரியரின் மருமகனுமான வே.உதயகுமார் அன்போடு அழைக்கின்றார்.

மறைக்கப்பட்ட வரலாற்றுண்மைகள் காத்திரமான முறையில் பதிவு செய்யப்பட்டு வெளிவரும் இந்நூலானது ஆய்வாளரின் 9ஆவது படைப்பு என்பதுடன் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மணாவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு தேவiயான வரலாற்று உண்மைகளை தாங்கிய பொக்கிஷமாக கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்மொழி, சமயம், வரலாறு, பண்பாடு, கலைகள், என பல்துறை சார்ந்த ஆய்வுநூல்களை எழுதி வெளியிட்டு ஆய்வாளர் நா.நவநாயகமூர்த்தி ஈழத்து மூத்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் மட்டுமன்றி தமிழருக்கு தமிழரே துணை என வாழ்ந்துவரும் அறிஞருமாக கருதப்படுகின்றார்.

தமிழரும் முருகவழிபாடும், தொல்லியல் சிந்தனைகள், பண்டைய தமிழர் பண்பாட்டுக்கோலங்கள், பண்டைய ஈழத்தமிழர், தம்பிலுவில் கண்ணகி வழிபாடு, ஈழத்தமிழர் வரலாற்று சுவடுகள், பழந்தமிழர் நடுகற் பண்பாடு, திருக்கோவில் பிரதேச இலக்கிய வரலாறு போன்ற ஆய்வு நூல்களையும், பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் அருட்பாமாலை, உகந்தைமலை ஸ்ரீ வேல்முருகன் பேரில் பாமாலை, தம்பிலுவில் கண்ணகையம்மன் பாமாலை, கருங்கொடித்தீவு சின்னக்ககுளம் ஸ்ரீ வீரம்மாகளியம்மன் அருளமுதம் ஆகிய இசைப்பாடல் நூல்களையும் இதுவரை இவர் வெளியிட்டுள்ளார்.

கலாபூஷணம்,தொல்லியலாளர்,இந்துசமய நூலாசிரியர் ஆய்வாளர் உள்ளிட்ட பல பட்டங்களை பெற்ற பெருமைக்குரிய இவரது பெறுமதி மதிப்பிட முடியா இந்நூல் மிகவும் எளிமையான முறையில் வெளியிடப்படவுள்ளதுடன் ஏனைய நூல்கள் வெளிவர நம்நாட்டு அன்பர்களும், புலம்பெயர் உறவுகளும் ஆதரவு வழங்கி இவரது மகத்தான பணிக்கு உறுதுணை வழங்க வேண்டும் என்பதே அவரதும் எமதும் எதிர்பார்ப்பாகும்.