முதலாவது கடல்நாச்சியம்மன் ஆலயமான பெரியகல்லாறு கடல்நாச்சியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு

இலங்கையின் முதலாவது கடல்நாச்சியம்மன் என்ற புகழோடு விளங்கும் மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீகடல்hநச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஒரு நாள் திருச்சடங்கு நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் அம்பாறை  மாவட்டத்திற்கும் எல்லையாக விளங்கும் பெரியகல்லாறில் சுமார் 500 வருடங்களுக்கு முன்பாக இந்த கடல்நாச்சியம்மன் ஆலயம் தோற்றம்பெற்றதாக ஆலய வரலாறு கூறுகின்றது.

இலங்கையில் இங்கு கடல்நாச்சியம்மன் ஆலயம் தோற்றம்பெற்றதை தொடர்ந்து வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் கடலாச்சியம்மன் ஆலயம் தோற்றம்பெற்றது.

ஒரு நாள் திருச்சடங்காக நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று பிற்பகல் பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து அம்பாள் கொண்டுசெல்லும் நிகழ்வு பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பெண் அடியார்கள் கற்பூரச்சட்ட ஏந்திவர காவடிகள் ஆடிவர சிறுவர் சிறுமியர்களின் நடனங்களும் ஆயிரக்கான அடியார்கள் புடை சூழ கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து நள்ளிரவு திருச்சடங்கின் முக்கிய நிகழ்வான பூரணை கும்பம் நிறுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கன்னியர்கள் ஆரத்தியெடுக்க பெருமளவான பக்தர்களின் ஆரோகரா கோசத்துடன் இந்த பூரணை கும்பம் நிறுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது பெருமளவான அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வகையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

கடல்நாச்சியம்மன்; ஆலயத்தின் வருடாந்த ஒரு நாள் திருச்சடங்கினை காண்பதற்கு இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து இலட்சக்கணக்கானோர் வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.