துறைநீலாவணை கண்ணகி அம்மனுக்கு சிறப்பாக நடைபெற்ற கன்னிக்கால் வெட்டும் பூசை

(சசி துறையூர்)  துறைநீலாவணை கண்ணகி அம்மனுக்கு சிறப்பாக நடைபெற்ற கன்னிக்கால் வெட்டும் பூசை .

மட்டுமா நகரினில்
எட்டுத்திக்கும் பெயர் சொல்லும் வீரம் விளை நிலம் வாவிபுடை சூழ் ஊராம் துறைநீலாவனையில் கொங்கை மர நிழலில்
குன்றுகள் குடைந்து குலம் காக்க
மரத்தடியில்  குடியிருந்து அருளாட்சி புரியும் கண்ணகித் தாயாவளின் உற்சவப் பொருவிழாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கன்னிக்கால் வெட்டும் பூசை நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறின.


ஆலயத்தில் நடைபெற்ற பூசை நிகழ்வுகளைத் தொடர்ந்து பக்த்தர்கள் புடை சூழ அம்மன் வீதி உலா வந்து சித்தமான பக்தையின் இல்லத்தில் இருந்து கன்னிக்கால் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டு ஆலயத்தில் இரவு பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது.

இன்று திங்கட் கிழமை இவ்வருட உற்சவத்தின் இறுதி நாளாகும் அம்மனின் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம் பெற்று நாளைக்காலை திருக்குளூர்த்தி பாடுதலுடன் நிறைவு பெறும்.



சக்தி வழிபாட்டில் கண்ணகி வழிபாடு பிரசித்தமானது, புராதனமானது. 
பொங்கல் படைத்து குளிர்த்தி பாடி மக்கள் கண்ணகியை வழிபடுவதைக் காணலாம்.

கிழக்கிலங்கை தேறும் கண்ணகி அம்மனுக்கான உற்சவமானது மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன, இதனால் கிழக்கிலங்கை முழுவதும் பக்திப்பரவசமாக விழாக்கோலம் பூண்டுள்ளதனை காணலாம்.


அம்மனின் உற்சவம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அடைந்திடும் ஆனந்தத்திற்கு அளேவே இல்லை.

 சிறியவர்கள் பால் காவடி, பெரியவர்கள் இழுவைக்காவடி, தூக்கு காவடி,என்றும் பெண்கள் தீச்சட்டீ ஏந்தல் என பலவகையான
நேர்த்திக்கடன்களை வாழ்வு வளம் பெற  பக்தியோடு  மேற்கொள்வர்.

பத்தினித் தெய்வ வழிபாடான கண்ணகி வழிபாடு ஆரம்பம் எவ்வாறு? ?

 சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில்,சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியை பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் காப்பியத் தலைவி கண்ணகி ஆவாள்.

கற்பிற் சிறந்தவளாக ஒழுக்க நெறி நின்ற இவள், எவ்வித நியாயமுமின்றி பொய்க் குற்றச்சாட்டில் கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவன் கோவலனின் குற்றமற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியன் அரச சபையில் வாதித்து நிரூபித்தாள்.

தன் மகா தவறு கண்டு வேதனையடைந்த பாண்டியனும் அவனது அரசி கோப்பெருந்தேவியும்  உயிர் துறந்தனர்.

கோபம் அடங்காத கண்ணகி, மதுரைநகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்து
வானோர் வடிவில் வந்த கோவலனோடு தெய்வ விமானமேறி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள் அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள், நீதியை நிலைநாட்டி தனது பத்தினித் தன்மையை நிலைநாட்டிய மானுடப் பெண்ணை தெய்வமாக காத்து நிற்க
தாயே எமக்கு நீ வரமருள வேண்டும் என வேண்ட வைகாசித்திங்களில் வருவேன் என்று வரம் ஈந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

குன்றக்குரவைப் பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதற் சடங்கு கண்ணகி சடங்காகும். அதனையொட்டி கண்ணகி சடங்கு முறை வழக்கிற்கு வந்ததாக அறிய முடிகின்றது.