122நாட்களையும் தாண்டி தொடரும் பட்டாரிகளின் போராட்டம் -உதவ முன்வருமாறும் கோரிக்கை

பல்வேறு அளுத்தங்களுக்கு மத்தியில் போராடிவரும் வேலையற்ற பட்டதாரிகளில் எவராவது விபரிதமான முடிவினை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பினையும் அரசாங்கமும் அரசியல்வாதிகளுமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 122வது நாளாகவும் இடம்பெற்றுவருகின்றது.

தமது தொழில்உரிமைக்கான போராட்டம் பல்வேறு அழுத்தங்களுக்கும் மன உளைச்சலுக்கும் மத்தியிலும் நடைபெற்றுவரும் நிலையில் தமது போராட்டம் தொடர்ச்சியாக முன்கொண்டுசெல்லப்படும் என வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மத்திய மாகாண அரசாங்கங்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதனையும் இதுவரையில் ஆரம்பிக்காமல் இருப்பது கவலையளிப்பதாகவுள்ளதாகவும் பட்டாரிகள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு கருத்துகள் மாகாணசபையினால் வெளியிடப்பட்டுவருகின்ற நிலையிலும் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசாங்கத்தினால் பல்வேறு உறுதிமொழிகள் தமக்கு வழங்கப்பட்டபோதிலும் இதுவரையில் அதனை நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் பட்டாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கான நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படாதது கவலையளிப்பதாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இன்று பல்வேறு பிரச்சினைகளுடன் பெண் பட்டதாரிகளும்ஆண் பட்டதாரிகளும் போராட்டத்தில் பங்கெடுத்துவருவதாகவும் பல்வேறு மன அழுத்தங்களுக்கும் வேறுவேறு அழுத்தங்களுக்கும் உள்ளான நிலையிலேயேபோராட்டத்தில் பங்கெடுத்துவருவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் எந்த பட்டதாரியாவது விபரிதமான முடிவினை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பினையும் மத்திய மாகாண அரசுகளும் எமது அரசியல்வாதிகளும் ஏற்கவேண்டும் எனவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ச்சியான போராட்டத்தினை முன்கொண்டுசெல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வரவேண்டும் என பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய நிலையில் பட்டதாரிகளின் உரிமையினைப்பெற்றுக்கொள்ளவேண்டுமானால் தொடர்ச்சியான போராட்டத்தினை முன்கொண்டுசெல்லவேண்டிய நிலையுள்ளதாகவும் அதற்காக உதவுவதற்கு நலன் விரும்பிகளும் பொது அமைப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் உதவ முன்வரவேண்டும் எனவும் பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உதவ முன்வருவோர் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்தை 0771913881 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புகொண்டு உதவமுடியும்.