எதிர்காலத்தில் பட்டதாரிகள் வீதியில் இறங்காத நிலையேற்படுத்தவேண்டும் - வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்

எதிர்காலத்தில் பட்டதாரிகள் வீதியில் இறங்கிப்போராடாத வகையில் அவர்களுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு எதிர்காலத்தில் மாகாணசபைகள் சிறந்த திட்டங்களை தீட்டி செயற்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 74வது நாளாகவும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக போராடிவருகின்றனர்.

தமது தொழில் உரிமையினை வலிறுத்தி இந்த போராட்;டத்தினை நடாத்திவரும் நிலையில் அவர்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.

அண்மையில் மட்டக்களப்பில் போராட்டம் நடாத்தும் பட்டதாரிகளின் போராட்ட இடத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடல்களை நடாத்தினார்.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளை மாகாண மற்றும் மத்திய அரசுகளின் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது தொடர்பில் உறுதியாக தங்களுக்கு அறிவிக்கப்படவில்லையென தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அவ்வாறான நடவடிக்கையினை எடுப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் பட்டதாரிகள் வீதியில் இறங்கி போராடாத வகையில் நடவடிக்கைகளை இரு அரசாங்கங்களும் மேற்கொள்ளவேண்டும்.கல்வி முறையில் மாற்றங்களைக்கொண்டுவரவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிருஷாந்த் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகளுக்கு தாங்கள் நன்றி தெரிவிக்கும் அதேவேளையில் கடந்த காலத்தில் உhயி நடவடிக்கையினை கிழக்கு மாகாணசபை மேற்கொண்டிருந்தால் இவ்வாறான போராட்டங்களை நடாத்தவேண்டிய நிலையேற்பட்டிருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் உரிய தரப்பினரால் தமக்கான உறுதிமொழிகள் வழங்கப்பட்டால் போராட்டம் கைவிடப்படுவது தொடர்பில் சிந்திக்கப்படும் என்றார்.