தமிழர்களின் பாரம்பரிய கலைகலாசாரங்களை கட்டிக்காக்கும் நுண்கலை துறைக்கு ஆபத்தா?

கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் அவர்கள் நுண்கலை பட்டதாரிகளுக்கான ஆளணி வெற்றிடங்கள் இலங்கையில் இல்லை என வரிந்துகட்டிக்கொண்டு ஊடகங்களிலும், பாராளுமன்றிலும் பேசியிருந்தமை மனவேதனை அளிக்கின்றது.

நுண்கலைத்துறை என்பது ஒரு இனம்சார்ந்த கலை கலாச்சாரங்களின் பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் துறையாக அமைகின்றபோதும் அதனை வளர்த்துச் செல்வதற்கு உறுதுணையாய் இருக்கவேண்டிய எமது இனம் சார்ந்த அரசியல்பிரதிநிதிகளே அவை நலிவடையச் செய்யும்வகையில் விமர்சிப்பது ஒரு கேலிக்குரிய விடயமே.

உழைப்புக்காகவும் ஊதியத்திற்காகவும் வாயில் வருபவற்றை வரிந்து கட்டிக்கொண்டு விமர்சிக்கும் அரசியல் பிரதிநிதிகள் அவ்வாறு இருக்கிறார்களெனினும் நுண்கலைத்துறையில் ஊக்கப்படுத்திய துறைசார் வல்லுனர்களும் இவ்வாறே உள்ளனர்.

தமது உயர் பட்டப்படிப்புக்களுக்கு கிராமம் கிராமமாக சென்று எமது கலைகளின் இருப்பை ஆராய்ந்து தம்மை வளப்படுத்திக் கொண்ட துறைசார் வல்லுனர்கள் இத்தகைய அரசியல் பிரதிநிதிகளது அறிக்கைகளுக்கு மறுப்புக்கள் தெரிவிக்காமல் இருப்பது ஏன்? நீங்கள் பல்கலைக்கழகத்தில் செய்த ஓட்டுமாட்டு வேலைகளை அரசியல்வாதிகள் கண்டுபிடித்து உங்களை காலிபண்ணிவிடுவார்கள் என்ற பீதியா? இல்லை நுண்கலைப் பட்டம் படித்தவன் எப்படி போனாலும் போகட்டும் என்ற அக்கறையின்மையா?
இன அழிப்பு என்பது வெறுமனே இனம்சார்ந்த மக்களை_கொன்று குவிப்பது மட்டுமல்ல அந்த இனம்சார்ந்த பாரம்பரியங்களை முடக்குவதும் ஒரு இன அழிப்புத்தான் இத்தகைய இன அழிப்பின் நகர்வினைத்தான் எமது நுண்கலைத் துறையை புறக்கணிப்பதன்மூலம் இன்று நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இன்று புறக்கணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நுண்கலைத்துறைசார்ந்து எம்மை பயிற்றுவித்த துறைசார் வல்லுணர்களாலேயே நாம் இக்கலையை ஆர்வத்துடன் பயிலவேண்டியதாயிற்று. பல்கலைக்கழகத்தில் நடனம், நாடகம், சித்திரம், சங்கீதம் என நான்கு துறைகளையும் நீங்களே எம்மிடையே முக்கியத்துவப்படுத்தினீர்கள் என்பதை நீங்கள் ஒருபோதும் மறுக்க முடியாது.
எமது நுண்கலைத் துறை இவ்வாறு ஆட்சியாளர்களாலும்,
அரசியல்வாதிகளாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் நிலை தொடருமாயின் எமது இனத்தின் இருப்பை வலியுறுத்தும் இவ் நுண்கலைத் துறையினை எமது இளைய தலைமுறை பயில்வது கணிசமாக குறையும்.
இன்று நுண்கலை துறையினை குறை கூறுபவர்கள் அதன் மேம்பாடு தொடர்பில் சிந்திக்க தவறுவது ஏன்?இன்று நுண்கலை துறையில் உள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது ஏன்?

தொல்பொருட்கள் ஆய்வுகள் திணைக்களத்தில் இன்று அதிகளவில் சிங்களவர்களே ஆய்வுசெய்கின்றனர்.இன்று வடகிழக்கில் ஒரு சிலரே இவ்வாறான திணைக்களங்களில் கடமையாற்றுகின்றனர்.அவ்வாறான துறையினையும் நுண்கலை துறையினையும் இணைத்து வடகிழக்கின் தமிழர்களின் பாரம்பரியங்களை பாதுகாக்க அரசியல்வாதிகள் தவறியே வருகின்றனர்.

இன்று வடகிழக்கில் உள்ள தொல்பொருட்களை நாங்கள் பெரும்பான்மையினத்திற்கு தாரைவார்க்கும் நிலையே இருக்கின்றது.தொல்பொருட்கள் இருக்கும் இடமெல்லாம் பௌத்தர்களின் பாரம்பரியம் என்னும் நிலையினை தொல்பொருள் திணைக்களம் அடையாளப்படுத்துகின்றது.

இவ்வாறான நிலையில் தொல்பொருட்கள் ஆய்வுகள் நிலையத்தில் தமிழர்களை அதிகளவில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

இதன் விளைவாக எமது பாரம்பரிய பொக்கிஷமாக திகழும் நுண்கலைத்துறை எம்மிடையே மெல்லச்சாகும் என்பதுடன் தமிழர்களின் பாரம்பரியங்களும் வரலாறுகளும் அழிக்கப்படும் நிலையினை உணர்ந்து எமது அரசியல் தலைமைகள் கருத்துகளை வெளியிடவேண்டும் என்பதுடன் அவற்றினை பாதுகாப்பதற்கான நடவடிக்கையினையும் எடுக்கவேண்டும்.