அபிவிருத்திக்குழுவில் எடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் அக்கூட்டம் எதற்கு –வியாழேந்திரன் எம்.பி.கேள்வி

அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாதென்றால் எதற்கு நடத்தவேண்டும், அபிவிருத்திக் குழுக்கூட்டங்களை கலைத்துவிட்டு மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு-செங்கலடி பதுளை வீதியிலுள்ள கொடுவாமடு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (6) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்து கொண்டிருந்ததுடன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துதெரிவித்தார்.

கல்குடா கும்புறுமூலையில் கட்டப்படுகின்றதான எரிசாராய உற்பத்தி தொழில்சாலையை நிறுத்துமாறு மாகாணசபை, பிரதேச, மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் தீர்மானமெடுத்தும் தற்பொழுதும் உற்பத்தி தொழில்சாலை கட்டுமானப் பணி இடம்பெறுகின்றது.

குறித்த எரிசாரய உற்பத்தி நிலையத்தினால் வேலைவாய்ப்பு என்ற ஒரு நன்மையை மாத்திரம் கொண்டு பலர் இலாபமீட்டுவதற்கு செயற்படுகின்றார்களே தவிர, எமது சமூகத்தின் எதிர்கால நலனை எவரும் முன்னெடுப்பதாக இல்லை.
முன்னைய ஆட்சியாளர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்த மதுபான விற்பனை நிலையத்தினால் தற்பொழுது தமிழ் மக்களின் வாழ்வாதாரம் சீரழிந்து இருப்பதினால் இவ்வாறான எரிசாரய உற்பத்திச் தொழில்சாலை நிலையங்களை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கல்குடாவில் அமைக்கப்படும் எரிசாராய உற்பத்தி நிலையத்தினால் பல பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள நிலையில், நிபுணத்துவக்குழு என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு திரிபவர்களுக்கு அதன் நன்மை மாத்திரம் சுய இலாபத்துக்காக தென்படுகின்றது, எதிர்காலத்தில் சீரழிவது ஏழை தமிழ் மக்கள்.

முதலாளியை மேலும் முதலாளியாக்கும் செயற்பாட்டை கொண்டுவந்து இவ்வாறான மதுபான உற்பத்தி தொழில்சாலைகளை அமைத்து, தமிழர்களின் நிலங்களை விற்று நில ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது.

இன்று சில இணையத்தள ஊடகங்கள்கூட குறித்த மதுபானசாலை உற்பத்தி தொழில்சாலை விடயங்களுக்கு சார்பாக கருத்துக்களை சிலரின் வேண்டுகோளுக்கேற்ப வெளியீடுகின்றனர். தமிழ் இணையத்தள ஊடகங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாக அமைகின்றது.

கல்குடா கும்புமூலை  வேம்பு பகுதியில் அமைக்கப்படுகின்றதான மதுபானசாலை உற்பத்தி தொழில்சாலையை நிறுத்தக்கோரியும், கல்குடா பகுதியில் வைத்து தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நியாயமான நீதியான விசாரணைகோரி செங்கலடி பதுளை வீதியிலுள்ள கொடுவாமடு கிராம அபிவிருத்திச் சங்கம், கொடுவாமடு சக்தி விளையாட்டுக் கழகமும் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மதலமைச்சரின் வாக்கு பொய் ஆகுமா, தமிழர் தாயகத்தில் மதுபானசாலைகள் வேண்டாம் நல்லாட்சி அரசே!, மதுவால் சீரழியும் மட்டக்களப்பு மாவட்டம், பிரதமரே மதுபானசாலையை உடன் நிறுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.