பொன் அணிகளின் சமர்:மட்டக்களப்பு சிவானந்தா அபார வெற்றி

பொன் அணிகளின் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் இடையிலான சமர் இன்று புதன்கிழமை காலை வெகுவிமர்சையாக ஆரம்பமானது.

கிழக்கு மாகாணத்தில் இராம கிருஷ்ன மிசன் கல்லூரிகளான  திருக்கோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி ஆகியவற்றுக் கிடையில் பொன் அணிகளின் சமர் ஒன்று விட்ட ஒரு வருடமாக திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் மாறிமாறி நடைபெற்று வருகின்றது. 1993 ஆம் ஆண்டு  ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் திரு. சி. தண்டாயுதபாணி , சிவானந்தா கல்லூரி அதிபர் திரு. விஜயரெட்ணம் தலைமையில் முதலாவது போட்டி 1993.09.15 திருகோணமலயில் நடைபெற்றது.

இது வரை நடைபெற்ற 23 போட்டிகளில் 13 தடவைகள் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினரும், 10 தடவைகள் சிவானந்தா வித்தியாலயமும் வெற்றி; பெற்றுள்ளன.

இவ்வருடம் 24வது போட்டி மட்டக்களப்பில் சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் புதன்கிழமை 10.05.2017 நடத்தப்பட்டது. இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வெ.தவராசா கலந்து கொண்டார்.

நிகழ்வுகள் காலை 9.00 மணியளவில் இராமகிருஷ்ண மிஷன் வளாகத்திலிருந்து பவனியாக அதிதிகள் மற்றும் இரு அணியினரையும் விளையாட்டுமைதனம் வரை அழைத்து செல்லப்பட்டு, அதனைத் தொடர்ந்து 10.00 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகின.

நானைய சுழற்சியில் வெற்றிபெற்ற சிவானந்தா அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

203 ஓட்டங்களை இலக்குவைத்து ஆடிய ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி அணியினர் 36.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து  107 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அதற்கமைவாக 95 ஓட்டங்களால் மட்டக்களப்பு சிவானந்தா அணியினர் வெற்றியீட்டினர். இதன்போது சிறந்த ஆட்ட நாயகனாக சிவானந்தா அணியின் சதுஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 50 ஓட்டங்களையும் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

இவர்களுக்கு வெற்றிக்கேடயங்களும் சவால் கிண்ணங்களும் வீரர்களக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.