வாழைச்சேனையில் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் அமைக்கப்படும் கட்டிடத்தை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு,வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயத்துக்குச் சொந்தமான காணி மோசடி செய்யப்பட்டமை தொடர்பாகவும், அக்காணியில் அமைக்கப்பட்டு வரும் கட்டடத்தை நிறுத்துமாறும் கோரி இன்று புதன்கிழமை ஆர்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

ஆலய நிருவாகம் ஏற்பாடு செய்த பேரணியில் கிராம அபிவிருத்திச் சங்கம், இளைஞர் விளையாட்டுக் கழகம், மாதர் சங்கம் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக வாழைச்சேனை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் வரை சென்றது.

இதன்போது வாழைச்சேனை பிரதே சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளருக்கான மகஜரினை பிரதேச செயலாளர் வ.வாசுதேவனிடம் வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதே சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் மகஜரைப் பெற்றுக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் - சர்ச்சைக்குரிய காணியில் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தினை உடன் நிறுத்துமாறு கோரி தற்போது காணி உரிமை கோரியுள்ள நபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்றும் இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.