போராட்ட வடிவத்தினை மாற்றி போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் -மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள்

தமது போராட்டத்திற்கான சாதகமான முடிவுகளை வழங்காவிட்டால் போராட்ட வடிவத்தினை மாற்றியமைத்து போராட்டங்களை நடாத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 86வது நாளாகவும் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

வீதிகளில் உண்டு உறங்கி தமது தொழில் உரிமைக்கான போராட்டத்தினை முன்கொண்டுவரும் பட்டதாரிகள் தாங்கள் இன்று பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

வேலையற்ற பட்டதாரிகளில் சிலர் போராட்டம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பல்வேறு நோய்களுக்கு உள்ளாகுவதாகவும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமது நியாயமான கோரிக்கையினை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கோ அல்லது உறுதி மொழியை வழங்குவதற்கோ யாரும் முன்வராத நிலையிலேயே தாங்கள் தொடர்ச்சியாக போராடிவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கின்றது மாகாணசபை நடவடிக்கையெடுக்கின்றது,கூட்டங்கள் நடாத்தப்படுகின்றன.ஆனால் உறுதியான உத்தரவாதங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையே இருக்கின்றது எனவும் பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.