தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் எந்த அரசியல் பழிவாங்கலும் இடம்பெறாது –கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜனா

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணசபையின் எந்த அரசியல் பழிவாங்கலும் நடைபெறாது என்பதை உறுதியாகக்கூறுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.

பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான சிகரங்களின் சமர் கிரிக்கட் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை மாலை பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றுகையில்,

அரசியல்வாதிகள் பாடசாலை நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்பதை நான் வரவேற்கின்றேன்.அரசியல்வாதிகளாக அல்லாமல் மக்கள் பிரதிநிதிகள் பாடசாலை சமூகத்துடன் இணைந்து செல்வதன் மூலமே அப்பாடசாலையினை அபிவிருத்திசெய்யமுடியும்.

அரசியல்வாதிகள்,மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிபர்கள்,ஆசிரியர்கள் அச்சம்கொள்வதை விட அதிகாரிகளுக்கு அச்சப்படும் நிலையிருக்கின்றது.அந்தநிலை மாறவேண்டும்.

கடந்தஆண்டு எனது நிதியொதுக்கீட்டின் கீழ் மூன்று பாடசாலைகளுக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கியிருந்தேன்.ஆனால் அவற்றினை என்னை அழைத்து பொறுப்பேற்பதற்கு அந்த பாடசாலைகளின் அதிபர்கள் அச்சப்படுகின்றனர்.நிர்வாக ரீதியான சிக்கல்கள் ஏற்படும் என்று அச்சப்படுகின்றனர்.அந்தநிலைமாறவேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் ஆசனம் வழங்குமாறு கோரியும் அமைச்சு பதவி வழங்குமாறு கோரியும் கூட்டம் கூட்டமாக அரசியல் தலைமையகத்திற்;கு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் செல்வதையே இதுவரை நான் கண்டுள்ளேன்.ஆனால் அதிகாரிகளின் இடமாற்றத்திற்காக பஸ் பிடித்து அமைச்சர்களிடம் செல்லும் இந்த மாவட்டத்தில் இருக்கின்றது.அந்த நிலைமாறவேண்டும்.ஒரு நீதியான நிர்வாகம் இருக்கவேண்டுமானால் இந்த நிலைமை மாறவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்வி அமைச்சினை பொறுப்பேற்றுள்ளது.கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் அமைச்சராக வருவதற்கு முன்பாக கல்வி திணைக்களம் உட்பட கல்வி தொடர்பான சகல பதவிகளையும் வகித்தவர்.அவர் காலத்தில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணசபையில் எந்த அரசியல் பழிவாங்கலும் நடைபெறாது என்பதை உறுதியாகக்கூறுகின்றேன்.