25வீத அரசியல் பிரவேசத்தினை பெண்கள் உறுதிப்படுத்தவேண்டும் -பாராளுமன்ற உறுப்பினர் சிராணி

அரசியலமைப்புமூலம் பெண்களுக்கு வழங்கியுள்ள 25வீத அரசியல் பிரவேசத்தினை பெண்கள் உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சிராணி விஜயவிக்ரம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பெண்களினை வலுவூட்டுவது தொடர்பிலான செயலமர்வு இன்று மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் நடைபெற்றது.

இலங்கை பாராளுமன்ற பெண்கள் உறுப்பினர்கள் சபையின் ஏற்பாட்டில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் திருமதி அனோமா கமகே பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சிராணி விஜயவிக்ரம,திருகோணமலை மாவட்ட கிழக்கு மாகாண காணி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜனநாயக ஆளுமையினையும் பொறுப்புக்கூறலையும் பலப்படுத்தும் கருத்திட்டத்தின் கீழ் இந்த செயலமர்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இதன்போது பெண்களின் அரசியல் முக்கியத்துவம் சமத்துவமான வாழ்வினை கட்டியெழுப்புவதற்கு தேவையான ஒழுங்குகள் உட்பட பல்வேறு வலுவூட்டும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்த செயலமர்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்களும் இதில் கலந்துகொண்டனர்.