1000 பட்டதாரிகள் அரசசேவையில் இணைப்பது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை

கிழக்கு மாகாணத்தில் ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பதற்கும் தகவல் தொழில் பயிற்சியாளராக உள்ளீர்ப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன் அவற்றினை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 73வது நாளாகவும் இன்றும் நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த தொடர்போராட்டத்தினை பட்டதாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் அண்மையில் மட்டக்களப்பு ஓட்டமாவடிக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மட்டக்களப்புக்கு வருகைதந்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு தமதுபிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக்கூறியிருந்தனர்.

இது தொடர்பில் தான் உடனடி நடவடிக்கையெடுப்பதாகவும் இளைஞர்கள் வீதியில் போராட்டங்களை நடாத்தக்கூடாது என ஜனாதிபதி உறுதியளித்திருந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனும் இது தொடர்பில் உடனடி நடவடிக்கையெடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் உள்ளவாங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் மேலும் ஒரு தொகுதியினரை தகவல் தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இதுவரையில் இது தொடர்பிலான உறுதியான தகவல்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லையெ பட்டதாரிகள் தங்களது போராட்டத்தினை கருத்தில்கொண்டு நடவடிக்கையெடுத்த ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்க நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.

வடகிழக்கில் பட்டங்களை பூர்த்திசெய்த அனைவரது தொழில் உரிமையும் உறுதிப்படுத்தும்போதே தமது போராட்டத்தினை கைவிடுவது தொடர்பில் ஆலோசிக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்தது.