மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பட்டதாரிகளுக்கு நியமனம் -கிழக்கு முதலமைச்சர் –கிழக்கு மாகாணசபை முற்றுகை

மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று திருகோணமலையில் உள்ள மாகாணசபை நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கான தொழில் உரிமையினை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆரம்பித்த போராட்டம் வடகிழக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆரம்பித்த போராட்டம் இன்று 64வது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று திருகோணமலையில் திருகோணமலை மற்றும் அம்பாறை பட்டதாரிகளுடன் இணைந்து மாகாணசபையினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தினர்.

இந்த நிலையில் மாணவர்களின் முற்றுகை காரணமாக கிழக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் ஸ்தம்பி நிலையினை அடைந்ததை தொடர்ந்து பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் குறித்த ஆர்ப்பாட்டத்துக்க தடையுத்தரவு வழங்குமாறு மனுதாக்கல் செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல்,பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்காமல் அவர்கள் போராட்டம் நடாத்தலாம் என நீதிவான் குறிப்பிட்டார்.இந்த நிலையில் குறித்த போராட்டம் கிழக்கு மாகாணசபையினை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவந்தது.

இந்த நிலையில் பட்டதாரிகளில் சிலரை அழைத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் பட்டதாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து பட்டதாரிகளின் விபரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதன் காரணமாக மத்திய அரசு அனுமதியளிக்கம் பட்சத்தில் உடனடியாக நியமனம் வழங்க நடவடிக்கையெடுப்பதாக இங்கு முதலமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என்ற அவசர பிரேரணையொன்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தினால் கிழக்கு மாகாணசபையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.