கதவடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட சிவில்சமூக அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு

மட்டக்களப்பு  மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும்  தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் முதலானவற்றை மூடி பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களது போராட்டத்தை உலகறிய செய்வதற்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.


இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கு தாயக பூமியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் நிறைவடைந்தும் தமிழ் மக்களுக்கான எதையும் அரசாங்க செய்யவில்லை  தமிழ் மக்கள் தங்களுக்குரிய உரிமைகளை கேட்டு இன்றும் போராடி வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதற்கான போராட்டம் !
சொந்த நிலத்தை மீட்பதற்கான போராட்டம் !
அரசியல் கைதிகளின் விடுதலை கோரிய போராட்டம் !
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் !
காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டம்!
மதுவுக்கு எதிரான போராட்டம் !
ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு நீதிகோரி போராட்டம்!

முதலான போராட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலே நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்ற போதிலும் இப்போராட்டங்கள் அரசினால் இதுவரையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் அரசினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்குமுகமாக எதிர்வரும் சித்திரை மாதம் 27ந் திகதி வியாழக்கிழமை வடகிழக்கில் பூரண  கதவடைப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட தமிழ் பேசும் சிவில்சமூகம் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன.

எனவே அதே தினத்தில் மட்டக்களப்பு  மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும்  தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் முதலானவற்றை மூடி பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களது போராட்டத்தை உலகறிய செய்வதற்கு ஆதரவு தருமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் இப்போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கங்கள் முச்சக்கர வண்டி ஓட்டுனர் சங்கங்கள் பண்ணையாளர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து சிவில்சமூக பொது அமைப்புக்களையும் ஆதரவு வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
-நன்றி -

மட்டக்களப்பு மாவட்ட சிவில்சமூக அமைப்புக்களின் ஒன்றியம்