மதுசாரம் பற்றி ஆராயும் புத்திஜீவிகள் வீதியில் கிடக்கும் பட்டதாரிகள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை

கல்குடா மதுசார உற்பத்திக்கு அவசரமாக கூடி ஆராயும் மட்டக்களப்பு புத்திஜீவிகள் 63 நாட்களாக வீதியில் கிடக்கும் எமக்கு ஆதரவு அளிக்காதது கவலையளிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 63நாட்களாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் இன்று திங்கட்கிழமையும் தொடர்ந்துவருகின்றது.

தமக்கான நியமனங்களை வழங்குவதற்கு மத்திய மாகாண அரசாங்கங்கள் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இந்த சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.

இந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணசபையினை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணசபை தமக்கு வழங்கிய உறுதிமொழியை இதுவரையில் நிறைவேற்ற தவறிவருவதாகவும் குற்றஞ்சாட்டும் அவர்கள் தமக்கான நியமனங்களை வழங்குவாற்கான விரைவான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மட்டக்களப்பில் 63 நாட்களாக வீதியில் தாங்கள் போராடிவரும் நிலையில் அதனை கண்டுகொள்ளாத மட்டக்களப்பு புத்திஜீவிகள் கல்குடாவில் அமைக்கப்படும் மதுசார உற்பத்தி நிலையம் தொடர்பில் அரசியல்வாதிகளை அழைத்து இரகசியம் கூட்டம் நடாத்துகின்றனர்.இது கவலைக்குரிய விடயமாகும்.

மட்டக்களப்பினை நேசிப்பதாக கூறிக்கொள்ளும் இவர்கள் மதுசார உற்பத்தி ஆதரவளிக்கின்றமை கவலைக்குரியது.எங்களைப்பற்றி சிந்திக்காது எங்கயோ உள்ள முதலாளிக்கு வக்காளத்து வாங்க முற்படுவது தொடர்பில் சந்தேகமுள்ளதாகவும் தெரிவித்தனர்.