கல்குடா மதுபான உற்பத்திசாலை – இரகசியமாக ஆதரவு கூட்டம் நடாத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு,புத்திஜீவிகள்

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் எத்தனோல் என்னும் மதுசார உற்பத்தி நிலையம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையொன்று இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இரகசியமான முறையில் நடைபெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பில் குறித்த மதுசார உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் குறித்த மதுசார உற்பத்தி நிலையம் அமைக்கப்படவேண்டும் என்ற ரீதியில் மட்டக்களப்பில் உள்ள நிபுணர்கள் அமைப்பு ஒன்று இந்த பணியை முன்னெடுத்துள்ளது.

மிகவும் இரகசியமானமுறையில் நூலகத்தின் கதவுகள் யன்னல்கள் அடைக்கப்பட்டு இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,ஞா.கிருஸ்ணபிள்ளை,கோ.கருணாகரம்,மா.நடராஜா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் உறுப்பினர்கள் வைத்தியர்கள்,பொறியியலாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதுடன் குறித்த மதுசார உற்பத்தி நிலையம் அமைக்கப்படவேண்டும் என்ற ரீதியில் கருத்துரைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மதுசார உற்பத்தி நிலையத்தின் துறைசார் நிபுணர்களின் விளக்கங்கள் வழங்கப்பட்டன.இது தொடர்பில் முதலீட்டாளர்களை அழைத்து சில நிபந்தனைகளை வைக்கலாம் என ஆலோசனை செய்துள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

கல்குடாவில் அமைக்கப்பட்டுவரும் மதுசார உற்பத்தி நிலையம் தொடர்பில் சாதக பாதக நிலை தொடர்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதே தவிர அதனை அமைப்பதற்கான உறுதிமொழிகள் எதுவும் வழங்கப்படவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.