கிணறுகள்,நீர்த்தாங்கிகளை மூடினால் 75வீதமான டெங்கு தாக்கத்தை குறைக்கமுடியும் -டாக்டர் கு.சுகுணன்

வீடுகளில் உள்ள கிணறு மற்றும் நீர்த்தாங்கிகளை வலைகள் கொண்டு பாதுகாப்பான முறையில் மாற்றுவதன் மூலம் 75 வீதமான டெங்க தாக்கத்தினை குறைக்கமுடியும் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் கே.சுகுணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சர் டாக்டர் கே.சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் டெங்கு பிரிவுக்கு பொறுப்பான டாக்டர் திருமதி எம்.தர்ஷினி,மண்முனைப்பற்று சுகாதார பணிப்பாளர் டாக்டர் திருமதி எஸ்.பவித்திரா,மண்முனைப்பற்ற பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரசாந்த்,காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி வெதகெதர மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்,களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இருந்து 20 இளைஞர்கள் பங்குகொண்டதுடன் பிரதேச விளையாட்டுக்கழக மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு, கிரான்குளம் ஆகிய பகுதிகளில் இந்த விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் ஆரம்ப நிகழ்வு கிரான்குளம் குடும்நல நிலையத்தில் வைத்திய அத்தியட்சர் சுகுணன் தலைமையில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வீடுகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் வீடுகளில் உள்ள நுளம்பு பெருக்கம் உள்ள இடங்களை துப்புரவுசெய்வது மற்றும் கிணறுகளுக்கு நுளம்பு வலைகளை இடுவது,செங்கல்லினால் கட்டப்பட்டுள்ள நீர்த்தாங்கிகளை பாதுகாப்பான முறையில் மூடுவது தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த வைத்திய அத்தியட்சகர் சுகுணன்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கின் தாக்கம் அதிகமாகவுள்ளது.பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதற்கு முடிவுகட்டவேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு பகுதிகளிலும் இதனைச்செய்துவருகின்றோம்.

ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள இளைஞர்களும் இந்த டெங்கு ஒழிப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.அதற்காகவே இவ்வாறான நிகழ்வுகளை ஏற்படுத்திவருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிணறுகள் மற்றும் நீர்த்தாங்கிகளை நுளம்பு பெருகாதவகையில் மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக இங்கு உரையாற்றிய பிராந்திய சுகாதார பணிமனையின் டெங்கு பிரிவுக்கு பொறுப்பான டாக்டர் திருமதி எம்.தர்ஷினி தெரிவித்தார்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே டெங்குவை ஒழிக்கமுடியும்.தனியாக சுகாதார பிரிவினால் மட்டும் அதனை ஒழிக்கமுடியாது.நுளம்பு பெருகும் இடத்தினை உடனடியாக மூடும் நடவடிக்கையினை நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம்.

நாங்கள் நுளம்பு குடம்ப pஉள்ளதா இல்லையா என்று சோதனைசெய்யத்தேவையில்லை.இன்று குடம்பி இல்லாவிட்டாலும் நாளை உருவாகலாம்.எனவே குடம்பிகள் உருவாகாத வகையில் கிணறுகள் மற்றும் நீர்;தாங்கிகள் மூடப்படவேண்டும்.அதற்கான நடவடிக்கையினையே நாங்கள் எடுக்கவேண்டும்.

நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிணறுகள் மற்றும் நீர்த்தாங்கிகளையும் மூடவேண்டும் என்ற இலக்குடன் நாங்கள் செயற்பட்டுவருகின்றோம்.

வீடுகளில் பாவிக்காத மலசல கூடங்கள் மற்றம் குளிரூட்டியின் பின்புற பகுதிகளில் இருந்து பரவும் நுளம்புகளினால் வீட்டில் உள்ளவர்கள் பாதிக்கும் நிலையுள்ளது.அது தொடர்பிலும் நாங்கள் விழிப்புணர்வினை ஏற்படுத்திவருகின்றேம்.