போராட்டம் மாற்று வடிவம் எடுக்குமானால் அதற்கான பொறுப்பதினை நல்லாட்சி ஏற்றக்கொள்ளவேண்டும் -மட்டு.பட்டதாரிகள்

அமைதியான முறையில் சாத்வீகமாக தாம் மேற்கொண்டுவரும் போராட்டம் வேறு வடிவங்களை எடுக்குமானால் அதற்கான முழுப்பொறுப்பதினையும் இந்த நல்லாட்சி அரசாங்கமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டத்தின் 50வது தினமான இன்று வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 50வது நாளாகவும் இன்று காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றுவருகின்றது.

தமக்காக தொழிலை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

2012 மார்ச் 30க்கு பின்னர் பட்டங்களை பூர்த்திசெய்த 1500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நிலையில் அவர்களுக்கான தொழில் உரிமையினை வழங்க மத்திய மாகாண அரசாங்கங்கள் இதுவரையில் உறுதியான நடவடிக்கையெடுக்கவில்லையென பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

பலமான எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளபோதிலும் தமது பிரச்சினை தொடர்பில் உறுதியான நடவடிக்கைகள் எதனையும் அவர்கள் எடுக்கவில்லையெனவும் இங்கு பட்டதாரிகள் தெரிவித்தனர்.

தமக்கான உறுதியான பதிலை எழுத்துமூலம் வழங்க தவறுமானால் புதுவருட கொண்டாட்டங்களை புறக்கணித்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.