மட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் 12வது நினைவு நாள் நிகழ்வு

சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் சிவராமின் 12வது நினைவு நாள் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (29) மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு ஊரணியில் உள்ள அமெரிக்கன் மிஷன் தேவாலய மண்டபத்தில் நேற்று மாலை 7.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய இரா சம்பந்தன் அவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் விசேட உரையும் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் மாவை.சேநாதிராஜா, கி.துரைராஜாசிங்கம், எம்.ஏ.சுமந்திரன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், ஊடக நண்பர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொது மக்கள் என பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நடைபெறும் அமரர் சிவராமின் 12 வது நினைவு அஞ்சலி நிகழ்வில், மாமனிதர் சிவராமின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தல், அஞ்சலி சுடர் ஏற்றல், தலைமையுரை, மாமனிதர் சிவராமின் ஊடகச் பணி தொடர்பாகவும், அரசியல் சார்ந்த விடயம் தொடர்பான பிரதம விருந்தினர்களின் விசேட உரைகளும் நடைபெற்றது.

அத்துடன் சிவராம் ஞாபகார்த்த உரையினை ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளரும் அமரர் சிவராமின் நண்பருமான கலாநிதி ரவிச்சந்திரா நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் கடந்த காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பில் முறையான விசாரணை நடாத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோளை அரசுக்கு விடுக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.